Asianet News TamilAsianet News Tamil

5C கொண்ட ஆட்சிதான் பாஜக ஆட்சி! ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு ஏன் விவாதிக்கவில்லை? இறங்கி அடிக்கும் முதல்வர்.!

உங்கள் ஆட்சியைப் பற்றி சி.ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப் பார்த்தீர்களா? இதைப் பற்றி சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதித்தீர்களா? இல்லை பதில் சொன்னீர்களா? அயோத்தியா திட்டத்தில்கூட ஊழல் செய்த கட்சிதான் பா.ஜ.க. என்று சி.ஏ.ஜி. அறிக்கை சொல்லியிருக்கிறது. 

BJP government is the government with 5C!CM MK Stalin question to PM Modi tvk
Author
First Published Sep 23, 2023, 8:34 AM IST

ஒன்றிய பாஜக அரசு, எல்லா திட்டங்களுக்கும் வாய்க்குள் நுழையாத பெயராக பார்த்து வைப்பர்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

முதல்வர் ஸ்டாலினின் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற பாட்காஸ்ட்  உரை 2வது ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், பாட்காஸ்ட்டின் முதல் எபிசோடுக்குப் பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா தொடக்கம் ஆகியவற்றை முடித்துவிட்டு, இப்போது உங்களிடம் பேசுகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கிய உடன், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தாய்மார் கேட்கிற மாதிரியான பதிவு அது, “எங்க முதல்வர் சொன்ன ஆயிரம் ரூபாய் வந்தாச்சு, பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?” இது தமிழ்நாட்டில் வைரல் ஆகிவிட்டது.

இதையும் படிங்க;- இந்த மனசு யாருக்கு வரும் சார்! 2 வயது குழந்தையை சென்னைக்கு ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர 10 லட்சம்! முதல்வர்

BJP government is the government with 5C!CM MK Stalin question to PM Modi tvk

நம்முடைய நாடும் - நாட்டு மக்களும் மீண்டும் பா.ஜ.க.விடம் ஏமாந்துவிடக் கூடாது என்றுதான் இந்த Speaking For India பாட்காஸ்ட் சீரிஸ்-ஐ தொடங்கியிருக்கிறேன். 2014, 2019ம் ஆண்டைப் போல 2024ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது. 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு - குஜராத் மாநிலத்தை முன்னேற்றி - அங்கே தேனாறும் - பாலாறும் ஓடுவதுபோல பொய்ச் செய்திகளை பரப்பி - அதன் மூலமாக, தன்னை வளர்ச்சியின் நாயகனாக காட்டிக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

60 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. எனக்கு 60 மாதம் கொடுங்கள். நான் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார் மோடி அவர்கள். அவருக்கு 60 மாதம் மட்டுமில்லை - கூடுதலாக, இன்னொரு 60 மாதம் ஆட்சி செய்கிற அளவிற்கு வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா? என்பதுதான் அவர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. எந்த வகையில் எல்லாம் இந்தியாவை வளர்த்திருக்கிறார் என்று பட்டியல் போட அவரால் முடியுமா?

5 T-தான் எனக்கு முக்கியம் என்று முதல் முறை பிரதமர்-ஆனபோது நரேந்திரமோடி அவர்கள் சொன்னார்.

* Talent – திறமை,

* Trading – வர்த்தகம்,

* Tradition – பாரம்பரியம்,

* Tourism – சுற்றுலா,

* Technology – தொழில்நுட்பம்

- இந்த 5 T-யில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்னைப் பொறுத்தவரையில், 5 C-க்கள் கொண்டதாகத்தான் இன்றைய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.

* Communalism– வகுப்புவாதம்,

* Corruption - ஊழல் முறைகேடுகள்,

* Corporate Capitalism - மூலதனக் குவியல்,

* Cheating – மோசடி,

* Character Assassination - அவதூறுகள்

 இந்த 5 C-க்கள் கொண்ட ஆட்சி இது. இப்படித்தான் சொல்ல முடியும். இதை இதுவரை விளம்பர வெளிச்சங்கள் மூலமாக பா.ஜ.க. மறைத்து வந்தது. ஆனால் இப்போது உருவான இந்தியா கூட்டணியும், இந்தியா கூட்டணித் தலைவர்களின் பரப்புரையும் பா.ஜ.க. கட்சியின் முகத்திரையை - பிரதமர் மோடி என்ற பிம்பத்தை கிழித்துவிட்டது. இதை நாங்கள் அரசியலுக்காக சொல்லவில்லை. உண்மையான தரவுகளின் அடிப்படையில்தான் சொல்கிறோம் என்று சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது.

இந்தியா கூட்டணியைப் பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என்று குற்றம் சாட்டுகிற மோடி அவர்களே! உங்கள் ஆட்சியைப் பற்றி சி.ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப் பார்த்தீர்களா? இதைப் பற்றி சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதித்தீர்களா? இல்லை பதில் சொன்னீர்களா? அயோத்தியா திட்டத்தில்கூட ஊழல் செய்த கட்சிதான் பா.ஜ.க. என்று சி.ஏ.ஜி. அறிக்கை சொல்லியிருக்கிறது. எல்லாத் திட்டங்களுக்கும், நம்முடைய வாய்க்குள் நுழையாத பெயராகப் பார்த்து வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இதையும் படிங்க;-  மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது.. ஆனால்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

அதாவது இராமாயணம் நடந்த இடங்களுக்கு எல்லாம் பயணிகளை அழைத்துச் செல்லும் சுற்றுலாத் திட்டம் அது. இதை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், கோவா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் செயல்படுத்தப் போவதாக சொன்னார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதில், பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி.  குற்றம் சாட்டி இருக்கிறது. ஒப்பந்தம் வழங்கியதில் எத்தகைய விதிமீறல்கள் இருக்கிறது என்று இந்த அறிக்கை சொல்லியிருக்கிறது.

* அடுத்து, பா.ஜ.க. அறிவித்ததை நிறைவேற்றாது என்பதற்கு சி.ஏ.ஜி. அறிக்கை ஒரு எடுத்துக்காட்டை சொல்லியிருக்கிறது. அதுதான் உதான் திட்டம். மிகப்பெரிய பீடிகையோடு இந்த திட்டத்தை தொடங்கினார்கள். ஏழைகள் விமானத்தில் பயணிக்கலாம், நடுத்தர நகரங்களிலும் விமான நிலையம் அமைக்கப்போகிறோம் என்று சொல்லி 2016-ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் இது.

உதான் திட்டத்திற்காக ஒன்றிய அரசு 1,089 கோடி ரூபாயை ஒதுக்கியது. திட்டமிடப்பட்ட 774 வழித்தடங்களில் விமான சேவை வழங்க முடிவு செய்ததில் 7 விழுக்காடு தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகிறது. 93 விழுக்காடு தடங்களில் விமானங்கள் இயக்கப்படவில்லை.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் சேலம், தஞ்சாவூர், இராமநாதபுரம், வேலூர் நகரங்களுக்கு உதான் திட்டத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிடப்பட்ட இந்த 4 நகரங்களில் சேலத்திற்கு மட்டும்தான் உதான் திட்டத்தில் விமானம் இயக்கப்பட்டது. அதுவும் இப்போது இல்லை. மொத்தமாக அறிவிக்கப்பட்ட 774 வழித்தடங்களில் 720 வழித்தடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை என்று சி.ஏ.ஜி அறிக்கை சொல்லியிருக்கிறது.

* அடுத்து இரயில்வே துறை. 2021-22-ஆம் ஆண்டில் இரயில்வே துறை, 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்காக 107 ரூபாய் செலவழித்து இருப்பதாகவும், இதனால் இந்திய இரயில்வேயின் நிதிநிலை கவலைக்குரியதாக மாறிவிட்டதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* அடுத்து, நாம் அடிக்கடி சொல்கிற, விளம்பரங்களால் பொய் பிம்பத்தை கட்டமைத்திருக்கும் பா.ஜ.க. அரசு என்று; அந்த விளம்பரங்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா?

ஒன்றிய அரசின் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களில் 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதி, ஒன்றிய அரசின் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு முறைகேடு நடந்திருக்கிறது என்று அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடுகளுக்கெல்லாம் உச்சம் டோல் பிளாசா முறைகேடுதான். பயணம் செய்யும் பொதுமக்களிடம் டோல் பிளாசா மூலமாக, நாள்தோறும் மாபெரும் மோசடியான வசூல் நடந்திருக்கிறது.

5 டோல் பிளாசாக்களை மட்டும் தணிக்கை செய்ததில், விதிகளுக்குப் புறம்பாக, வாகன ஓட்டிகளிடம் இருந்து 132 கோடியே 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்து இருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டியிருக்கிறது. அவ்வாறு பார்த்தால் இந்தியா முழுவதும் எத்தனை டோல் பிளாசா இருக்கிறது… அதன் மூலமாக எத்தனை லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக வசூலாகி இருக்கும் என்று கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்.

* அடுத்து, நாடு முழுவதும் இருக்கும் சாலைகளை இணைக்க பாரத்மாலா என்ற திட்டத்தை 2015-ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள். அதில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 கோடியே 37 லட்சம் என்பதை, 32 கோடியே 17 லட்சமாக ஆக்கி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த 8 ஆண்டு காலத்தில் 13 ஆயிரம் கிலோ மீட்டருக்குத்தான் சாலை போடப்பட்டிருக்கிறது. 40 விழுக்காடு கூட வேலைகள் முடியவில்லை.

* இதேபோல், "துவாரகா விரைவு நெடுஞ்சாலை" திட்டம், பாரத்மாலா பரியோஜனா–1 என்ற திட்டத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கிறது.   திட்டமிட்ட மதிப்பைவிட 1,278 மடங்கு கூடுதல் தொகை செலவிடப்பட்டிருக்கிறது.

* அடுத்து, சுகாதாரத் துறை. இந்தியாவிற்கே முன்னோடியாக ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்‘ தமிழ்நாட்டில்தான் 2009-ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து, 2018-இல் பிரதமர் மிகப் பிரமாண்டமாக அறிவித்த திட்டங்களில் ஒன்று ஆயுஷ்மான் பாரத் திட்டம். ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுவதாக பா.ஜ.க. சொல்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இறந்த நோயாளிகளுக்கு, இறந்த பின்பும், சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லி, காப்பீட்டுக் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில், ஒரு நோயாளி பல மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்டிருப்பதாக கணக்கு காட்டுவது, ஒரே ஆதார் நம்பரை பலருக்கும் கொடுப்பது, ஒரே ஃபோன் நம்பரை பலரும் பதிவு செய்வது, ஏன், ஃபோன் நம்பரே கொடுக்காமல் பதிவு செய்வது என்று எக்கச்சக்கமாக முறைகேடுகள் நடந்திருக்கிறது. எத்தனை பேர் – எத்தனை கோடி என்று தனித்தனி நம்பர்களாக சொன்னால், கேக்கும் எல்லோருக்கும் தலையே சுற்றிவிடும்!

இதையும் படிங்க;-  40க்கு 40 வெற்றி.! தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது, இந்தியா முழுமைக்கும் வெற்றி பெறனும்- ஸ்டாலின்

இவ்வாறு, அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை என்று எல்லாவற்றிலும், 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அளவிட்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் இதற்கு பிரதமரோ – சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை. அவர்களால் பதில் சொல்லவும் முடியாது. அதனால்தான் இதில் இருந்து மக்களை திசைதிருப்ப வெவ்வேறு அரசியலை கையில் எடுக்கிறார். ஆனால், ஏழை, எளிய - பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியின - மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருபவர்தான் நரேந்திர மோடி என்று, இப்போது நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் – சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டிருப்பதே, இதற்கான அடையாளம்.

BJP government is the government with 5C!CM MK Stalin question to PM Modi tvk

2024 தேர்தலில், பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். பா.ஜ.க.வின் வகுப்புவாத - ஊழல் - கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலாக முழங்க வேண்டும். பரந்து விரிந்த நம் இந்திய நாட்டை காப்பாற்றுகிற கடமை நம் எல்லோரின் கையிலும்தான் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios