Asianet News TamilAsianet News Tamil

40க்கு 40 வெற்றி.! தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது, இந்தியா முழுமைக்கும் வெற்றி பெறனும்- ஸ்டாலின்

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய். இதை 1100 ரூபாய்க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது 200 ரூபாயை மட்டும் குறைத்திருக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
 

M K Stalin has said that not only Tamil Nadu but the whole country should win in the parliamentary elections KAK
Author
First Published Sep 18, 2023, 7:32 AM IST

வேலூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  ஒரு ஆட்சி, இன்னொரு பக்கம் கட்சிஇரண்டின் மூலமாகவும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களைவிட தலைசிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். இடையிடையே கொள்கையற்ற அ.தி.மு.க. கூட்டத்தின் ஆட்சி வந்து தமிழ்நாட்டைச் சீரழித்தாலும் - அதையும் திருத்தி - தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து வருகிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி- தமிழ்நாட்டுமக்களின் வளர்ச்சி - தமிழினத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தை அதற்கான உரிமைகளை சிதைப்பது மூலமாக, நம்முடைய மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக பாரதீய ஜனதா கட்சி செய்துகொண்டு வருகிறது.

M K Stalin has said that not only Tamil Nadu but the whole country should win in the parliamentary elections KAK

ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய்தான். அந்த வரி வருவாயைக் கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள். மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண்டது மாநில அரசுகள்தான். மக்களுக்கு தேவையான கல்வி - சுகாதாரம் – குடிநீர் சாலை வசதிகள் - கடன்கள் - மானியங்கள் - பெண்கள் முன்னேற்றம் - விளிம்புநிலை மக்களுக்கான உதவிகள் - இவை எல்லாவற்றையும் வழங்க வேண்டிய கடமை 13/18 அரசுகளுக்குத்தான் இருக்கிறது. இதை செய்து தருவதற்கு நிதி வேண்டாமா? அப்படிப்பட்ட நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள். நான் கேட்பது, நிதியை வசூல் செய்கிறீர்களே, அதை முறையாகப் பிரித்துக் கொடுக்கிறீர்களா அதுவும் இல்லை.

அதேபோல கல்வி மிக முக்கியமான ஒரு துறை. ஒவ்வொரு மாநில அரசும் - அங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் பண்பாடு, அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி, பொதுவான கல்வி முறை என்ற பெயரில், நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். ஒன்றிய அரசாங்கம் சொல்லும் கல்வி வளர்ச்சியை - தமிழ்நாடு எப்போதோ எட்டிவிட்டது. கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் அவர்கள் கொண்டு வரும் கல்விக் கொள்கை, மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் நீட் தேர்வைப் பற்றி சொல்லவே அவசியமில்லை. கனவைச் தேர்வு. சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் நீட் லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். 

சில தனியார் கோச்சிங் செண்டர்களின் லாபத்துக்காகவே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த 14-ஆம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்கு படிப்பதற்காக வந்தவர் அவர். ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டு. 22 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள், இத்தனை தற்கொலைகள் நடக்கிறதே. இதற்கான காரணத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆராய்ந்ததா? இரக்கமற்ற அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் எத்தளை வாக்குறுதி கொடுத்தார்கள்? நிறைவேற்றினார்களா? நேற்று ஒரு தாய்மார் கேட்கிற மாதிரி, போனில் மீம்ஸ் பார்த்தேன். "எங்கள் முதல்வர் சொன்ன 1000 ரூபாய் வந்தாச்சு பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?" - இது வைரல் ஆகிவிட்டது. நாம் பிரதமரைப் பார்த்து என்ன கேட்கிறோம்? இதைச் செய்யுங்கள் என்று... அதைச் செய்யுங்கள் என்று புதிதாக எந்த வாக்குறுதியையும் கேட்கவில்லை. புதிதாக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கீர்களா? இல்லையா என்றுதான் கேட்கிறேன்.M K Stalin has said that not only Tamil Nadu but the whole country should win in the parliamentary elections KAK

தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றினாரா? இல்லை. உதாரணத்துக்கு ஒன்று கேட்கிறேன். மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று 2015-ஆம் ஆண்டு சொன்னார்கள். இப்போதுதான் டெண்டரே விட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் யாரும் நினைவுபடுத்திவிடக் கூடாது என்றுதான் மற்ற . பிரச்சினைகளைக் கிளப்பிக் குளிர்காயப் பார்க்கிறார்கள். சரி என்ன சாதனை இந்த ஒன்பது வருடத்தில் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய். இதை 1100 ரூபாய்க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது 200 ரூபாயை மட்டும் குறைத்திருக்கிறார்கள். இதை மக்கள் நம்புவார்களா? 

2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 71 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 102 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை மூன்று மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வரும்போது டீசல் ஒரு லிட்டர் 55 ரூபாய். இப்போது ஒரு லிட்டர் 94 ரூபாய். ஒன்றிய அரசின் வரியை ஏழு மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு. இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவுக்கு இருந்த கடன் 55 லட்சம் கோடி ரூபாய்தான். அது, இந்த 9 ஆண்டுகாலத்தில் 155 லட்சம் கோடி ரூபாய் ஆகிவிட்டது. பெரிய நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வாராக் கடன் என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்படி வேதனையை மட்டுமே மக்களுக்குத் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அண்மையில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையின்படி மட்டும் 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கி இருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள்தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த ஊழல் முகத்தைக் கிழித்தெறிய வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முக்கியக் கடமை. பா.ஜ.க.வின் ஊழல் முகத்தைப்  பொதுமக்கள் மத்தியில்  அம்பலப்படுத்தி ஆக வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நமது கூட்டணிதான் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்றாக வேண்டும். 

அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் 15 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி எழுப்ப முடியுமா? முடியாதா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா? தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்வே திட்டங்களை ஏராளமாகக் கொண்டு வர நம்மால் முடியும். புதிய விமான நிலையங்கள் மெட்ரோ ரயில்களை இயக்க முடியும். இவை எல்லாமே நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமையுமானால் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும். இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தர நம்மால் முடியும். இங்கு நாம் அமல்படுத்தி வரும் திராவிட மாடல் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது, 

M K Stalin has said that not only Tamil Nadu but the whole country should win in the parliamentary elections KAK

இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களையும் வெற்றி பெற்றே தீருவோம் என்பதுதான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள் விழா ஆண்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் கூட்டணிக் கட்சியாக நம்முடைய இயக்கத்தை உயர்த்துவோம் என்பதுதான்.

அன்பு உடன்பிறப்புகளே! உங்களின் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணி வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம்! என்று இந்த வேலூர் மண்ணில் நடைபெறும் முப்பெரும் விழாவில் உறுதியேற்போம். உறுதியேற்போம் உறுதியேற்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios