மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க தவறி விட்டீர்களா? அப்படின்னா விண்ணப்பிக்க வாய்ப்பு! அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!
மகளிர் உரிமை தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
அன்றைய தினமே பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1ம் தேதி உரிமை தொகை வங்கி கணக்கில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதி முதல் 30 நாட்களுக்கு இ சேவை மையங்கள் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேல்முறையீடு செய்யும் காலகட்டத்தில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மகளிர் உரிமை திட்டத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்ய்படவில்லை. தகுதி வாய்ந்த ஒரு மகளிர் கூட விடுபட்டுவிட கூடாது என்பது முதல்வர் ஸ்டாலின் உத்தரவு. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் மேல்முறையீடு செய்ய வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திலேயே புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.