அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த நர்மதேஷ்வர் சிவலிங்கம்! இந்துக்களுடன் முஸ்லிம்களும் சேர்ந்து அமோக வரவேற்பு!
அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட நர்மதேஷ்வர் சிவலிங்கத்துக்கு இந்துகளுடன் இஸ்லாமியர்களும் சேர்ந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஜனவரி 2024 இல் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயிலின் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மூலைகளில் இருக்கும் பக்தர்கள் இதற்காக பங்களிக்கின்றனர். இந்தக் கோயிலில் ராமர் சிலை மட்டுமின்றி ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
பக்தர் வழிபடும் பல்வேறு தெய்வங்களின் சிலைகளும் இந்தக் கோயிலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன்படி, ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கத்தின் ஒரு பகுதியிலிருந்து வடிவமைக்கப்பட்ட நர்மதேஷ்வர் சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கம் இப்போது அயோத்திக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.
சிவலிங்கத்தின் ஊர்வலம் ஜான்சியில் சிறபாபக நடைபெற்றது. திரளாகக் கூடிய பக்தர்ளால் சிவலிங்கத்திற்கு அமோகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஜான்சி மேயர் பிஹாரி லால் ஆர்யா உட்பட ராமர் மற்றும் சிவன் பக்தர்கள் பலர் நர்மதேஷ்வர் சிவலிங்கத்தை வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்வில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சிவலிங்கத்தை வரவேற்கும் நிகழ்வுக்கு வருகை தந்த அம்ஜத் கான், ராமர் மத எல்லைகளைக் கடந்து அனைவருக்குமானவராக விளங்குகிறார் என்று கூறினார்.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்தது ஏன்? கர்நாடகாவில் காங். அரசைக் கண்டித்து பாஜக போராட்டம்
அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில் நிறுவப்படவேண்டிய சிவலிங்கத்தின் வருகை அப்பகுதி மக்களால் மங்களகரமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. வரவேற்பு அளிக்க வந்த மற்றொரு இஸ்லாமியரான கைஃப் அலி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ராமர் கோவில் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சம்பத் ராயின் வேண்டுகோளின் பேரில் இந்த சிவலிங்கம் அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று ஊர்வலத்தை வழிநடத்தும் நர்மேத்ஷானந்த் மகாராஜ் விளக்கினார். "இந்து சனாதன பாரம்பரியம் ஒரு கோவிலில் ஒரு தெய்வம் தனியாக வசிக்கக்கூடாது என்று கூறுகிறது. எனவே, ஐந்து தெய்வங்கள் கருவறையில் நிறுவப்படும்" என்ற அவர் ராமர் கோவிலில் உள்ள கருவறையில் பகவான் ராமரே பிரதானக் கடவுளாக இருப்பார் என்றாலும் நர்மதேஷ்வர் சிவலிங்கத்துக்கும் உரிய இடம் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.