அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதோடு, 69 ஆண்டு கால வரலாற்றில் சனிக்கிழமை அன்று தீர்ப்பு அளித்திருப்பதும் இதுவே முதல் முறையாகும். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். ஆகையால், ஓய்வு பெறுவதற்குள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்க வேண்டும் என  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீவிரமாக இருந்து வந்தார். இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 40 நாட்கள் விசாரணை நடைபெற்று வந்தது. 

நவம்பர் 14 அல்லது 15-ம் தேதியில் இதை தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அயோத்தி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதேபோல நாடே எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை வழங்கினார்.

அதில், ‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலமும் இந்துக்களுக்கு சொந்தமானது. அங்கு ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமிய அமைப்புகளுக்கு அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும். கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும்’ என்று  உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், இஸ்லாமிய அமைப்புகள் மசூதி கட்டுவதற்காக அயோத்திலேயே முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், 69 ஆண்டு கால உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தீர்ப்பும் சனிக்கிழமையில் வழங்கப்பட்டதில்லை. வழக்கமாக, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நீதிமன்றத்தின் பணி நாட்களாக உள்ளன. முக்கிய வழக்கு விசாரணைகள் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் நள்ளிரவு முதல் விடிய விடிய கூட நடந்திருக்கிறது. ஆனால், முதல் முறையாக அயோத்தி வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமையாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தேர்ந்தெடுத்திருப்பது கூட வரலாற்று சிறப்புமிக்கதாகி உள்ளது.