பாலிவுட் நடிகை அலியா பட், தனது சொந்த செலவில் கர்நாடகாவைச் சேர்ந்த கிராம மக்களுக்கு, சூரிய மின் விளக்கு வழங்கி, உதவியுள்ளார்.
பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் அலியா பட். சமீபத்தில் உத்தா பஞ்சாப், ஹைவே, ராஸி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர் சத்தம் இல்லாமல் ஒரு பொதுநல சேவையை செய்துள்ளார். ஆம். கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு சூரிய மின் விளக்கு தந்து உதவியுள்ளார்.அங்குள்ள கிக்கேரி கிராம மக்கள், மின் வெளிச்சம் இன்றி மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி அலியா பட்டுக்கு தகவல் கிடைத்தது. அந்த கிராம மக்களுக்கு சூரிய மின் விளக்கு வழங்க முடிவு செய்தார்.இதற்காக, சமீபத்தில் அவர் தொடங்கிய ஆடைகள் ஏலம் விடும் நிகழ்ச்சி மூலமாகக் கிடைத்த வருமானத்தை பயன்படுத்திக் கொண்டார். மி வார்ட்ரோப் இஸ் சூ வார்ட்ரோப் என்ற பெயரில், சில மாதங்கள் முன்பாக, தனது சொந்த ஆடைகளையே ஏலம் மூலமாக அலியா பட் விற்பனை செய்திருந்தார்.அந்த தொகையை பெங்களூருவை சேர்ந்த அரோகா என்ற தொண்டு நிறுவனத்திடம் வழங்கினார். அவர்கள், தேவையான சூரிய மின் விளக்குகளை வாங்கி, கிக்கேரி கிராமத்தில் வசிக்கும் 40 குடும்பத்தினருக்கு வழங்கினர். இதற்காக, அந்த கிராம மக்கள், நடிகை அலியா பட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அலியா பட், இந்தியாவில் இன்னும் பல மக்கள் இருளில் வசிக்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அந்த மக்களுக்கு சூரிய மின் விளக்கு வழங்கி உதவினால் நன்றாக இருக்கும். இதற்காகவே நான் இந்த பணியை தொடங்கியுள்ளேன். இதுவரை 40 குடும்பங்களுக்கு உதவியுள்ளோம். மேலும், 200 குடும்பங்களுக்கு சூரிய மின் விளக்குகள் வழங்கப்படும்,’’ எனக் கூறினார். பொதுமக்கள் கவனத்தை ஈர்க்க, நடிகர், நடிகைகள் தான்தோன்றித்தனமாக செயல்படும் இந்த காலத்தில், சத்தமின்றி அலியா பட் செய்து வரும் செயல்கள் பாராட்டத்தக்கவை!