குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களவை தொடர்ந்து தெலங்கானாவில் நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் வாங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்கெடுப்பு மூலம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று, சட்டமாகவும் முழுவடிவம் பெற்றது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது. இதில், பல உயிர்களும் பறிபோனது. 

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலாக கேரள சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குடியுரிமை வழங்குவதில் மத ரீதியாக ஒரு பிரிவினரை குறிவைத்து வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க முடியாது என்பதால், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசை எதிர்க்கும் 5 மாநிலம் இதுவாகும்.