சிக்னல் கோளாறு' காரணமாக ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து நடந்தது. இந்த விபத்தில் 288 பேர் இறந்துள்ளனர், ஆனால் விபத்து தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனித பிழையின் விளைவாக ஏற்பட்டதா என்பது குறித்து தற்போது வரை தெளிவான தகவல்கள் இல்லை. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று ஒடிசாவின் பாலசோரில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து, விபத்து குறித்து விரிவான உயர்மட்ட விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். மேலும் “ விரிவான உயர்மட்ட விசாரணை நடத்தப்படும், மேலும் ரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை நடத்துவார்," என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முதல்கட்ட அறிக்கைகள் என்ன சொல்கின்றன?
ரயில்வேயின் சிக்னலிங் கட்டுப்பாட்டு அறையின் முதற்கட்ட அறிக்கையின்படி, விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரயில் தவறான பாதையில் சென்றதால் விபத்து ஏற்பட்டது என்றும், மனித பிழையின் விளைவாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன.
இதனிடையே மணிக்கு 127 கிமீ வேகத்தில் ஓடும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயிலுடன் மோதி, பிரதான பாதையில் தடம் புரண்டதாக ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “இது எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்பது ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ள விரிவான விசாரணையில் தெரியவரும். ஆனால், முதல்கட்ட விசாரணையில் இது ஒரு மனித தவறு என்று தோன்றுகிறது, ”என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறினார்.
எவ்வாறாயினும், கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி ஒருவர், தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் சிக்னல் கோளாறுகளால் விபத்து நடந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய அவர் “ ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சிக்னல் பேனலின்படி சரக்கு ரயில் ரயில் நிலையத்தின் லூப் லைனில் இருந்தாலும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 127 கிமீ வேகத்தில் வந்தபோது அதன் கடைசி சில பெட்டிகள் மெயின் லைனில் இருந்திருக்கலாம்." என்று கூறினார்.
அதாவது, பாலசூர் ரயில் நிலையத்தில் ஏற்கனவே சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அதே தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் செல்ல தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. எனினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.
