டெல்லியில்  பூட்டிய வீட்டுக்குள் 7 பெண்களும், 4 ஆண்களும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி  வடக்கு புராரி பகுதியில் அமைந்துள்ளது  சாந்த் நகர். இங்கு பூபிந்தர் என்பவரும் அவரின் சகோதரர் லலித் சிங் எஙனபவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இதில் பூபிந்தர் பலசரக்கு கடையும், லலித் சிங் தச்சுவேலையும் செய்து வந்தனர். பலசரக்குக் கடை வழக்கம் போல் காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டுவிடும். ஆனால், காலை 7.30 மணிஆகியும் திறக்கப்படவில்லை.

இதனால், அக்கம்பகத்தினர் சந்தேகமடைந்து, பூபிந்தர் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளனர். நீண்டநேரமாகியும் திறக்கப்படாததையடுத்து, போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, குடும்பத்தில் உள்ள 7 பெண்கள், 4 ஆண்கள் உள்ளிட்ட 11 பேரும் இரும்பு உத்தரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்திருந்தனர். அவர்களின் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அவர்கள் வீட்டிலும் எந்தவிதமான தற்கொலைக்கடிதமும் இல்லை.

அவர்கள், தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக இருப்பதால் அப்பகுதியில் பீதி நிலவுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, 11பேரின் உடலையும் மீட்டு, போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தபின், தற்கொலையா அல்லது யாரேனும் கொலை செய்திருக்கிறார்களா என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.