குக்கரில் சோறு பொங்கி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் என சொல்வது உண்மையா? அதன் பின்னணி என்ன என்பதை இங்கு காணலாம்.

குக்கரில் சமைப்பது மக்களிடையே பரவலாகிவிட்டது. அவசரகதியில் ஓடும் மக்களுக்கு 10 நிமிடத்தில் சோறாக்குவது தான் எளிய வழியாகத் தோன்றும். மிகக் குறைந்த நேரத்தில் சமைப்பது மற்ற வேலைகளுக்கான நேரத்தைத் தரும். ஆனால் குக்கரில் சமைப்பதால் நோய்கள் வரும் என்றும், குக்கர் உணவில் சத்துக்கள் இல்லையென்றும் சொல்லப்படுகிறது. குக்கர் உணவு சர்க்கரை நோயை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? குக்கரில் சமைத்தால் இந்த பிரச்சனைகள் வருமா என இந்தப் பதிவில் காணலாம்.

பிரஷர் குக்கர் என்பதே அதிக அழுத்தத்தில் அதிக வெப்பத்தில் விரைவாக உணவு சமைக்கும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். பொதுவாக அரிசியை சமைக்கும்போது அமைலோஸ் அல்லது அமைலோபெக்டின் என்ற வடிவில் தான் ஸ்டார்ச் இருக்கும். அதாவது ஸ்டார்ச் என்பது கார்போஹைட்ரேட்டின் ஒரு வகைதான். இதை அதிகம் சாப்பிட்டால் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாற்றப்பட்டு இரத்த சர்க்கரை அளவு உடனடியாக உயரும். இதன் காரணமாகவே சர்க்கரை நோயாளிகளை கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

வடித்த சாதம் Vs குக்கர் சாதம்

ஸ்டார்ச் அரிசியின் மேற்புறத்தில் 10%, உட்பக்கம் 90% காணப்படுகிறது. சாதத்தை வடித்து உண்பதால் மேலே உள்ள 10% ஸ்டார்ச் நீரோடு கரைந்து வெளியேறிவிடுகிறது. மீதமுள்ள 90% ஸ்டார்ச் மட்டுமே உடலுக்கு கிடைக்கும். ஆனால் குக்கரில் 90% ஸ்டார்ச்சுடன், உட்புறம் உள்ள 90% ஸ்டார்ச்சும் சேர்த்து உண்ணப்படுகிறது. இது பெரிய அளவிலான மாற்றம் இல்லை. சர்க்கரை நோயாளிகள் வடித்த சாதம் சாப்பிட்டால் 10 சதவீத ஸ்டார்ச் குறைகிறதே தவிர அது பெரிய அளவில் இரத்த சர்க்கரை அளவில் மாற்றம் கொண்டு வராது.

வேக வைப்பதன் பின்னணி

பொதுவாக காய்கறி, அரஒச்சி என எந்த உணவுப் பொருளை நீரில் வேக வைத்தாலும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை லீச்சிங் என்ற செயல்முறையால் நீரில் கலந்துவிடும். அந்த வகையில் சத்து மிகுந்த கைக்குத்தல் அரிசி, கவுனி அரிசி ஆகியவை வடித்து உண்ணும்போது சத்துக்களை இழக்க நேரிடலாம். வடிக்கும்போது வெளியேறும் நீரில் ஊட்டச்சத்துகளும் வெளியேறிவிடுகிறது. இந்த அரிசியை சமைத்து உண்டால் அவற்றில் சத்துக்கள் கிடைக்க வடித்த நீரையும் குடிக்க வேண்டும்.

குக்கர் நல்லதா?

குக்கரில் சமைக்கும்போது இந்தப் பிரச்சனையில்லை. ஏனென்றால் அதில் நீரை வடிக்கத் தேவையில்லை. மொத்த சத்துக்களும் அப்படியே கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் அளவாக கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். அது குக்கர் அல்லது வடித்த சாதம் எதுவாக இருந்தாலும் அளவாகவே உண்ண வேண்டும். மற்றபடி குக்கர் உணவில் சத்துகள் இருக்காது என சொல்வது கட்டுக்கதை.