உடல் எடையை பார்ப்பதற்கான சரியான நேரம் எது என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 இன்றைய காலகட்டத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஒவ்வொருவரும் பலவிதமான உடற்பயிற்சிகளையும், டயட் முறைகளைம் தவறாமல் பின்பற்றி வருகிறார்கள். காலையில் எழுந்து வாக்கிங், ஜாகிங் என்றும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. நம்மில் பலருக்கும் எடை மிஷினை பார்க்கும்போதெல்லாம் உடல் எடை அதிகரித்திருக்கிறதா? இல்லை குறைந்திருக்கிறதா? என்பதை சரிபார்க்கும் ஆர்வம் அதிகரிக்கும். 

எடை அதிகரிக்க காரணம்?

சில நாட்களுக்கு முன்பு உடல்எடையை பார்த்து இருந்தாலும், மீண்டும் உடல் எடையை சரிபார்ப்பார்கள். அப்போது உடல் எடை அதிகரித்திருப்பதாக காண்பிக்கும். எப்படி குறுகிய காலத்தில் உடல் எடை அதிகரித்திருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படும்.உடல் எடையை எந்த நேரத்தில் பார்க்கிறீர்களோ? அதற்கும், உடல் எடைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உதாரணமாக சாப்பிட்டு முடித்ததும் உடல் எடையை சரிபார்த்தால் உடல் எடை கூடி இருப்பதாக காண்பிக்கும்.

நாம் சாப்பிடும் உணவு, தேநீர், மருந்து, தண்ணீர் உள்ளிட்டவை உடல் எடையில் உடனேயே பிரதிபலிக்க கூடியவை. அதனால் மதியம், மாலை நேரங்களில் உடல் எடையை பார்த்தால் அது துல்லியமாக தெரியாது. ஓரிரு கிலோ உடல் எடை கூடி இருக்கலாம். அல்லது குறைந்திருக்கலாம்.

உடல் எடை பார்க்க சரியான நேரம்

அப்படின்னா எப்போது தான் உடல்எடையை பார்க்க வேண்டும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் தோன்றும். காலை நேரத்தில் எடையை பார்ப்பது மிகவும் சரியான நேரமாக இருக்கும். காலை நேரத்தில் வெறும் வயிற்றில் உடல் எடையை சரிப்பார்ப்பது என்பது மிகவும் சரியானதாக இருக்கும். தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் நபர் மாலை வேளையில் உடல் எடையை சரி பார்த்தால் கொஞ்சம் எடை கூடி இருப்பதாக தோன்றும்.ஏனெனில் நாம் உண்ட உணவு, பருகிய தண்ணீர் அதில் உள்ளடங்கி இருக்கும்.

ஆனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குபவர்கள், தோட்ட வேலை, கட்டடிட வேலை உள்ளிட்ட வேலைகளை செய்பவர்கள் மாலையில் உடல் எடையை சரிபார்த்தால் வழக்கத்தை விட உடல் எடை குறைவாக இருக்கும். ஏனெனில் அவர்களின் உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரிகள் எரிக்கப்பட்டிருப்பதே அதற்கு காரணம். அதனால் காலை வேளையில் வெறும் வயிற்றில் உடல் எடையை சரிபார்ப்பது அனைத்து தரப்பினருக்கும் துல்லியமான எடையை காண்பிக்கும். அதிகாலை நேரமே எடை பார்ப்பதற்கு ஏற்ற நேரமாக இருந்தாலும் தினமும் எடையைச் சரிபார்க்க வேண்டியதில்லை. மாதம் ஒருமுறை எடை பார்க்கலாம். ஆர்வமாக இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட எடையை சரிபார்க்கலாம். ஆனால் முந்தைய நாள் சாப்பிட்ட உணவு பொருட்களை பொறுத்து எடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.