மற்ற முறைகளை ஒப்பிடும் போது ஆயுர்வேத முறை உடல் எடை குறைப்பில் மட்டுமல்ல, எல்லா விதமான உடல் நல குறைபாடுகளையும் எளிமையாக சரிசெய்துவிடும்.

ஆயுர்வேதம் பிரச்சனையின் அடிவேர் வரை சென்று அதனை முழுவதுமாக சரிசெய்கிறது. எந்த முறையாக இருந்தாலும், உடல் எடையை குறைப்பதற்கு அந்த முறையை சீராக கடைபிடிக்க வேண்டும்.

ஆயுர்வேத முறையை பொறுத்தவரை, அதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் பலன் அளித்துக் கொண்டே இருக்கும்.

உடல் எடையைக் குறைப்பதற்கான இயற்கை ஆயுர்வேத உணவு முறைகள்

விரைவில் தூங்கி விரைவில் எழவும்

எடையைக் குறைக்க வேண்டுமானால், இரவில் 10-11 மணிக்குள் உறங்கி, அதிகாலை 5-6 மணிக்குள் எழ எழும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் பகல் நேரத்தில் உடலின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகவும், இரவில் போதிய ஓய்வையும் எடுக்கும். முக்கியமாக இந்த பழக்கத்தால் உடல் பருமன் பிரச்சனையைப் போக்கலாம்.

மூன்று வேளை உண்ணவும்

ஒருவர் காலையில் ஆரோக்கியமான காலை உணவையும், சுவையான மதிய உணவையும், மிதமான இரவு உணவையும் உட்கொள்ளுமாறு ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. மதிய வேளையில் கல்லீரல் மிகவும் சிறப்பாக செயல்படும் என்பதால், மதியம் வயிறு நிறைய சாப்பிடலாம்.

சீசன் உணவுகள் அவசியம்

நம் உடலுக்கு சீசனுக்கு ஏற்றவாறு உணவுகள் தேவைப்படுகிறது. அதனால் தான் குறிப்பிட்ட சீசனில் நமக்கு குறிப்பிட்ட சில உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கிறது. ஆகவே தவறாமல் சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட டயட்டில் சேர்க்க வேண்டியது அவசியம்

தண்ணீர்

உணவுக்கு முன் அல்லது பின் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்ணும் போது நீரைப் பருகினால், அது வயிற்றில் உள்ள அமிலங்களை நீர்க்கச் செய்து செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, உடல் பருமனை உண்டாக்கும்.

எலுமிச்சை மற்றும் தேன்

காலையில் எழுந்து பற்களைத் துலக்கிய பின், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இது பசியைக் குறைப்பதோடு, உடலை சுத்தம் செய்து, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இச்செயலால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது.

மிளகு

எலுமிச்சை மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் பானத்துடன், சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொள்வதும் நல்ல பலனைத் தரும். ஆனால் இந்த பானத்தை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு நாளில் பகல் வேளையில் எப்போது வேண்டுமானாலும் பருகலாம். இதனாலும் உடல் எடையைக் குறைக்கலாம்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிடுவதும் உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது கொழுப்பைக் கரைக்கும் செயல்முறையை மேம்படுத்த உதவும். அதற்கு இதனை உணவுக்கு முன் அல்லது ஸ்நாக்ஸ் நேரத்தில் கூட சாப்பிடலாம்.

செரிமான பிரச்சனைகள்

ஆயுர்வேதத்தின் படி, அஜீரண பிரச்சனைகள் உடல் பருமனை உண்டாக்கும். இதனைத் தவிர்க்க செரிமானத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதில் இஞ்சி, பப்பாளி, பாகற்காய, பூண்டு, மிளகாய் போன்றவை செரிமானத்தை மேம்படுத்தும் சிறப்பான உணவுகளாகும்.

காரமான உணவுகள்

உணவுகள் காரமின்றி இருந்தால், அது செரிமானத்தைக் குறைக்கும். ஆகவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் உண்ணும் உணவுகள் சற்று காரமாக இருக்க வேண்டியது அவசியம்.

டாக்ஸின்களை வெளியேற்றவும்

உடலில் டாக்ஸின்களின் அளவு அதிகரிக்கும் போது, உடல் பருமன் தூண்டப்படும். டாக்ஸின்களை வெளியேற்ற முயற்சிக்காமல் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது. ஆகவே டாக்ஸின்களை வெளியேற்றும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். உடலில் சேர்ந்துள்ள டாக்ஸின்களை மஞ்சள், இஞ்சி, மிளகாய் கலந்த கலவை எளிதில் வெளியேற்ற உதவும்.

இஞ்சி

நற்பதமான இஞ்சியை தேனுடன் சேர்த்து காலையில் சாப்பிட்டால், உடலின் வெப்பம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, எடை குறைவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

கொள்ளு

உடல் எடையைக் குறைக்க கொள்ளு பெரிதும் உதவியாக இருக்கும். 1 கப் கொள்ளுவை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் மதிய வேளையில் வேக வைத்து வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து சமைத்து சாப்பிடவும். இப்படி 45 நாட்கள் தினமும் உட்கொண்டு, ஒரு டம்ளர் மோர் குடித்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும்.

கற்றாழை

கற்றாழை ஜூஸ் உடன் மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பவுடர் சேர்த்து, அதோடு தேன் கலந்து குடிக்க வேண்டும். முக்கியமாக இதை குடித்த பின் மற்றும் குடிப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது.