use this remedy for brain improvement
ஞாபக சக்தி அதிகரிக்க கரிசலாங்கண்ணி கீரையை இப்படி சாப்பிட்டாலே போதும்...
மஞ்சள் கரிசலாங்கண்ணி
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த மூலிகை இது. மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து. வாரத்துக்கு இரண்டு நாள் இந்தக் கீரையில் சட்னி அல்லது துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். சிறந்த கிருமிநாசினியும்கூட. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். கல்லீரலைப் பலப்படுத்தும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், சளித்தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றையும் போக்கக்கூடியது. கீரையை நன்றாகக் கழுவி, உலரவைத்து பொடி செய்து சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் பொன்நிறமாக மாறும். இலையைக் காய்ச்சி சாறு எடுத்துத் தலையில் தடவி வந்தால், இளநரை மறையும்.
வல்லாரைக் கீரை
வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் அதிகம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயலைச் செய்யும் சக்தி இந்தக் கீரைக்கு இருப்பதால், ஞாபக சக்திக்கு முக்கியப் பங்காற்றுகிறது.
உடல் புண்களைக் குணமாக்குவதுடன், மூளை சோர்வைப் போக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், இதயத்தைப் பலப்படுத்தவும், தாது விருத்திக்கும் நல்லது. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால், குடல் புண், குடல் நோய், வாய்ப்புண்கள், வாய் நாற்றம் போன்றவை நீங்கும். கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக் கூடாது.
பிரம்மி
கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. நரம்பு மண்டலத்தைத் தூண்டி சோர்வை நீக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சாஃப்ட்வேர் தொழிலில் பணிபுரிபவர்கள் இந்த மூலிகையை நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனைச் சாறு எடுத்து நெய் சேர்த்து சாப்பிட்டுவந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்.
இலைகளைக் கசாயம் செய்து குடித்தால், மலச் சிக்கல் தீரும். இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டுவந்தால், குரல் வளம் பெருகும். வேரை அரைத்துக் கொதிக்கவைத்து நெஞ்சில் பூசினால், நாள்பட்ட சளி சரியாகும்.
நிலவேம்பு
சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலை சரிப்படுத்துவதிலும் மூலிகை முதல் பங்கு வகித்தது. கொடி போல் படரக்கூடிய மூலிகை. மூலிகையைப் பொடித்து, கசாயம் செய்து குடித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு. பசியைத் தூண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்துக் காய்ச்சல்களையும் குணமாக்ககூடியது. வருமுன் தடுக்கவும் செய்யும்.
பிரண்டை
தொட்டியில் வளர்த்தால் அழகாகப் படர்ந்து நிற்கும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும்.
மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.
