this food type solve the diabetes

நீரிழிவு கட்டுப்படுத்தும் உணவு முறை…

அதிக ஆற்றல் அளிக்கக் கூடிய காலை உணவு, மிதமான இரவு உணவு இவை இரண்டும் உங்கள் ரத்த சர்க்கரை எகிறுவதைக் கட்டுப்படுத்த உதவும்.

டெல் அவிவ் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகளின் அண்மைக்கால ஆய்வு முடிவு இது!

உலகில் 38 கோடிக்கும் அதிக மக்கள் நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

உணவுக்குப் பின் ரத்த சர்க்கரை அளவு அதீதமாக அதிகரிக்குமானால், அது இதயம் உள்பட பல உறுப்புகளின் பிரச்னைகளுக்கு வித்திட்டு, வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும்.

இந்த நிலையில் உணவு மூலமே ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

அதிக கலோரி காலை உணவும் குறைந்த கலோரி இரவு உணவும் இணையும் போது, அது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

மருத்துவ ரீதியாகச் சொல்வதானால், முறையான உணவே ரத்த பிளாஸ்மாவில் அதிக குளுக்கோஸ் கலக்கும் ஹைபர்கிலேகேமியாஎன்கிற நிலையைக் குறைக்கிறது.

‘‘காலை உணவில் அதிக கலோரி இருந்தாலும், ஓரளவே குளுக்கோஸ் அதிகரிக்கிறது. இரவு உணவில் குறைவான கலோரி இருந்தாலும் கூட, அதிக குளுக்கோஸ் உருவாகிறது. இதன் செயல்பாடு நாள் முழுக்கத் தொடர்கிறது’’ என்கின்றனர் டெல் அவிவ் விஞ்ஞானிகள்.

30-70 வயதுடைய இருபாலரிடமும் தொடர்ச்சியாக இச்சோதனை நிகழ்த்தப்பட்டது. முதல் குழுவுக்கு அதிக கலோரி காலை உணவும் குறைந்த கலோரி இரவு உணவும் வழங்கப்பட்டது.

இரண்டாம் குழுவுக்கு குறைந்த கலோரி காலை உணவும் அதிக கலோரி இரவு உணவும் வழங்கப்பட்டது.

அதாவது, இரு குழுக்களுக்கும் காலை உணவும் இரவு உணவும் முறையே மாற்றி வழங்கப்பட்டது. 

காலையில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் உட்கொண்ட முதல் குழுவுக்கு குளுக்கோஸ் அளவு 20 சதவிகிதம் குறைந்து காணப்பட்டது. அதோடு, இன்சுலின், ஏ மற்றும் பி இன்சுலின் சங்கிலிகளை இணைத்து அதன் சீரிய செயல்பாட்டுக்கு உதவும் C-peptide என்கிற அமினோ அமிலம், இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற GLP-1 எனும் ஹார்மோன் ஆகியவற்றின் அளவும் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

காலையில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் உட்கொண்ட இரண்டாம் குழுவுக்கு இந்த நற்பலன் கிட்டவில்லை.

அதோடு, மதிய உணவுக்குப் பின் இக்குழுவின் ரத்த சர்க்கரையானது, முதல் குழுவை விட, 23 சதவிகிதம் அதிகம் இருந்தது.இரண்டு குழுக்களும் ஒட்டுமொத்தத்தில் ஒரே அளவு கலோரிதான் எடுத்துக் கொண்டனர்.

ஆனால், எப்போது, எவ்வளவு சாப்பிட்டார்கள் என்பதில்தான் இந்த அதிரடி மாற்றமே!