இயற்கையாக மரணம் வருவதோ, எதிர்பாராமல் நிகழ்வதோகூட ஒப்புக்கொள்ளக் கூடியது. மனமொடிந்து, இந்த வாழ்க்கையோ, உறவுகளோ வேண்டாம் என்று தற்கொலை செய்துகொள்வது எந்த மனிதனுக்கும் நிகழக் கூடாதது.

தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன?

குடும்பப் பிரச்சனைகள்,

எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நாள்பட்ட, தீராத நோய்கள்,

காதல்

வேலையின்மை,

ஏழ்மை,

பரீட்சையில் தோல்வியுறுவது,

பொருளாதாரத்தில் ஏற்படும் திடீர் பின்னடைவு,

சொத்துத் தகராறு,

தொழில் நஷ்டம்,

போதைக்கு அடிமையாதல்,

வரதட்சணைப் பிரச்சனை,

பாலியல் பலாத்காரம், முறையற்ற கர்ப்பம்,

விவாகரத்து,

குழந்தையின்மை,

பிரியத்துக்குரியவர்களின் மரணம் என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.

தற்கொலைக்கான தீர்வுகள்

* குழந்தைகளுக்கு பள்ளியிலேயே தோல்வியால் ஏற்படும் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

* அம்மா, அப்பா இருவரும் ஒரே மாதிரியான படிப்பாட்டோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்துவது, விளையாடவிடுவது அவசியம். குழந்தைகளின் ஆளுமைத்திறன் வளர அது உதவும்.

* விரக்தி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

* இப்போது தற்கொலை எண்ணம் வருபவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க பல மையங்கள் இருக்கின்றன. தொலைபேசியில்கூட தொடர்புகொண்டு அவர்களுடன் பேசலாம். இது நல்ல தீர்வு தரும்.

* உறவினர்களுடனான உறவைப் பேணுவது; நண்பர்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிடுவது; ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது… எல்லாமே இதற்கு நல்ல தீர்வைத் தரும்.

* ஓய்வுகாலத்தைக்கூட பயனுள்ள வகையில் ஏதாவது அமைப்போடு சேர்ந்து பணியாற்றுதல், மற்றவர்களுக்கு உதவி செய்வது என அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், இந்த எண்ணம் வராது.

* தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது. உயரமான இடங்கள் (செல்போன் டவர், லைட் ஹவுஸ்…) பாதுகாப்பற்ற இடங்களில் அதை நெருங்க முடியாதபடி தடைகளை (Barricade) ஏற்படுத்தலாம். அதற்கு அரசு ஆவன செய்யலாம்.

* நம் நாட்டில் துப்பாக்கிக்கு கட்டுப்பாடு இருக்கிறது. அதனால், துப்பாக்கியால் செய்துகொள்ளும் மரணங்கள் குறைவு. ஆனால், பூச்சிகொல்லிகளுக்கு தடை இல்லை. பெரும்பாலானவர்கள் பூச்சிகொல்லிகளைத்தான் தங்களைக் கொல்லும் ஆயுதமாகக் கையில் எடுக்கிறார்கள். இலங்கையில்கூட இதற்கு கட்டுப்பாடு வந்துவிட்டது.

* அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே, பெற்றோரே குழந்தைகளை எதையும் எதிர்கொள்ளத் தயார்ப்படுத்த வேண்டும். பரீட்சை வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடப்பதல்ல. ஒரு மாதம் கழித்து இன்னொரு பரீட்சை எழுதிக்கூட தேர்ச்சி பெற்றுவிடலாம் என தைரியம் கொடுக்கலாம். இது ஒரு தற்காலிகத் தோல்வி; இதற்காக நிரந்தரமாக ஒரு முடிவைத் தேடிக்கொள்ளக் கூடாது என்ற விஷயத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதை ஊடகங்களிலும் பரவலாகச் சொல்ல வேண்டும்.

* பள்ளிகளில் ஸ்டூடன்ட் கவுன்சலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ பிரச்னை வரும்போது அவர்களுக்கு உரிய ஆலோசனை தர வேண்டும்.

* எப்போதாவது பொருளாதார மந்தபடி வரும்போதும் தற்கொலைகள் அதிகரிக்கும். அந்த நேரத்தில் அரசும் மக்களுக்கு உதவ வேண்டும்.