Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? விஷம் அன்றே கொல்லும். சோடா நின்று கொல்லும்...

Soda will kill you slowly
Soda will kill you slowly
Author
First Published Mar 3, 2018, 12:56 PM IST


 

"விஷம் அன்றே கொல்லும். சோடா நின்று கொல்லும்" 

பெருகிவரும் சோடா குடிக்கும் பழக்கம் சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாகப் பல சுகதேகிகள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

சோடா குடிப்பதால் முக்கியமாக பற்சிதைவும், பல் சம்பந்தமான நோய்களும், எலும்பு பலவீனமடைதலும், மூட்டு சம்பந்தமான நோய்களும், உடல் நிறை அதிகரிப்பு, சலரோகம், குருதியில் PH மட்டத்தில் ஏற்படும் மாறுபாடுகள், குருதி அமுக்க நோய், குருதியில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், இருதய நோய்கள், ஒஸ்ரியோ போறோசிஸ் போன்ற நோய்களும் ஏற்படும்.

இளம் வயதிலேயே பலருக்கு நீரிழிவு நோய், கொலஸ்ரோல் அதிகரிப்பு, நிறை அதிகரிப்பு போன்றவை ஏற்படுவதற்கு அதிகரித்த சோடாப் பாவனை ஒரு முக்கியமான காரணமாக விளங்குகின்றது.

அற்புதமான உணவுகளான முட்டையையும் பாலையும் குடிக்கப் பயப்படும் நம்மவர்களுக்கு ஆபத்தான சோடா வகைகளை பாட்டில் பாட்டில் வாங்கிக்குடிக்கின்றனர். 

சோடா குடிக்க வேண்டாம் என்று சொன்னால் “அப்போ தாகத்துக்கு எதைக் குடிப்பது?” என்று கேட்பவர்களுக்கு பதிலாக எதைச் சொல்வது? எம் சந்ததியின் சுகத்துக்காக நாம் சிந்திக்கவேண்டி இருக்கிறது.

காலம் காலமாக நாம் பாவித்துவந்த இயற்கையான பாதுகாப்பான குடிபான வகைகளை நாம் மீண்டும் பாவிக்க முயலுவோம். நின்று கொல்லும் பானமான சோடாவைக் குடிப்பதையும் கொடுப்பதையும் நிறுத்துவோம். 

இயற்கையான பானங்களான பழரசம், இளநீர், தேசிக்காய்த் தண்ணீர், மழைநீர், மோர், குத்தரிசிக்கஞ்சி, வீட்டிலே தயாரித்த கூழ், சுட்டு ஆறிய நீர், பால், சீனி சேர்க்காத தேநீர், பழத்தண்ணீர், ரசம், குடிநீர், சூப் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது.

அதிகளவு சீனிச் சத்தும் இரசாயனப் பதார்த்தங்களும் சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் சேர்க்கப்பட்டு பல்வேறு வகையான விளம்பரங்களுடன் விற்பனையாகும் சோடா வகைகளிடம் நாம் ஏமாறப்போகிறோமா? 

வருத்தத்தை விலை கொடுத்து வாங்கப்போகிறோமா? இளம் வயதில் எமது பிள்ளைகளை நீரிழிவு நோயாளியாகப் பார்க்க ஆசைப்படுகிறோமா? எலும்பு, மூட்டு நோய்களுக்கு ஆளாகி நோவால் அவதிப்படப்போகிறோமா? 

சோடாவை வாங்கும் முன் இவற்றைச் சிந்திப்போம். 

Follow Us:
Download App:
  • android
  • ios