குழந்தைகளின் இருமலை கட்டுப்படுத்த உதவும் மிக எளிமையான கை வைத்தியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு சளி, இருமல் அவ்வப்போது வரும். அதுவும் சளியை விட இருமல் தான் சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை நீடிக்கும். இதனால் இரவு நேரத்தில் குழந்தைகள் தூங்குவதற்கு சிரமமாக உணர்வார்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் இருமல் அதிகரிக்கும். ஆனால், சில கை வைத்தியத்தை பின்பற்றினால் இருமலை சுலபமாக கட்டுப்படுத்திவிடலாம். இதனால் குழந்தைகளும் இரவில் நிம்மதியாக தூங்குவார்கள். அது என்னென்ன கை வைத்தியம் என்று இப்போது இங்கு பார்க்கலாம்.
குழந்தையின் இருமலை போக்க உதவும் கை வைத்தியம் :
1. யூகலிப்டஸ் எண்ணெய் :
குழந்தையின் ஆடை அல்லது தலையணையில் சில துளிகள் இந்த எண்ணெயை தடவினால் அதிலிருந்து வரும் நறுமணம் குழந்தையின் நாசியை திறந்து இருமலிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். எக்காரணம் கொண்டும் தொண்டையில் இந்த எண்ணையை தடவி மசாஜ் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
2. சூடான சூப் :
உங்கள் குழந்தையின் தொண்டை இதமாக இருக்க காய்கறி அல்லது சிக்கனில் சூப் செய்து கொடுங்கள். இது இருமல் மற்றும் தொண்டை வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. அதுபோல மாலை வேளையில் பால் கொடுப்பதற்கு பதிலாக ஏதாவது சூப் செய்து கொடுங்கள். சூப் இளஞ்சூட்டில் இருக்கும் போது மிளகுத்தூளை சேர்த்து கொடுத்து வந்தால் தொண்டை கரகரப்பு மற்றும் இருமல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
3. மஞ்சள் பால் :
மஞ்சளில் பாக்டீரியா பண்புகள் இருக்கிறது. எனவே தினமும் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து குழந்தைகளுக்கு குடிக்க கொடுங்கள். இப்படி கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு இருமல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
4. தேன் மற்றும் மஞ்சள் :
மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனுடன் தேன் கலந்து குழந்தைக்கு கொடுத்து வந்தால் குழந்தையின் தொண்டை இதமாக இருக்கும். ஆனால் சிறு குழந்தைகளுக்கு தேன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
5. தேன் மற்றும் இஞ்சி :
அதுபோல தேனுடன் இஞ்சி நசுக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டை வீக்கம் இருமல் குணமடையும்.
6. விரள் மஞ்சள் :
விரல் மஞ்சள் தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்து வந்தால் இருமல் குணமாகும்.
7. தலையணை
குழந்தை இரவு தூங்கும் போது சளி ஆனது மூக்கின் பின்புறத்திலிருந்து தொண்டைக்குள் செல்கின்றது. இதனால் இரவு முழுவதும் குழந்தை இரும்பிக் கொண்டே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் குழந்தையின் தலையணையை சற்று உயர்த்தி வைத்தால் சளி தொண்டைக்குள் வருவது தடுக்கப்படும். இதனால் இருமல் வருவது குறைந்து விடும்.
8. உப்பு மற்றும் சூடான நீர்
சூடான நீரில் சிறிதளவு உப்பு கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் இருக்கும் அலர்ஜி சரியாகும். இருமல் குணமாகும்.
குறிப்பு :
குழந்தைக்கு இருமல் இருக்கும்போது சுயமாக சிகிச்சை ஏதும் செய்யாமல் முதலில் மருத்துவரை அணுகுவது நல்லது. அதுபோல குழந்தைக்கு இருமல் தீவிரமாக இருந்தாலோ, மூச்சு விடுவதில் சிரமமாக உணர்ந்தாலோ உடனே மருத்துவரை அணுகவும்.
