சமையலில் சேர்க்கும் கொத்தமல்லி இதய நோய் முதல் சருமப் பிரச்சனை வரை எல்லாவற்றையும் போக்கும் தன்மை கொண்டது.

நூறு கிராம் கொத்தமல்லில்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள்…

கலோரி 23

நார்ச்சத்து 11 சதவிகிதம்

புரதம் 4 சதவிகிதம்

கார்போஹைட்ரேட் 1 சதவிகிதம்

கொழுப்பு 1 சதவிகிதம்

வைட்டமின்கள்

வைட்டமின் கே 388 சதவிகிதம்

வைட்டமின் ஏ 135 சதவிகிதம்

வைட்டமின் சி 45 சதவிகிதம்

ஃபோலேட் 16 சதவிகிதம்

வைட்டமின் இ 13 சதவிகிதம்

ரிபோஃபிளேவின் 10 சதவிகிதம்

கொத்தமல்லியில் உள்ள மருத்துவ குணங்கள்:

* மூளையில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நியூரோடிரான்ஸ்மிட்டரான கோலினெர்ஜிக் உடன் கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.

* கொத்தமல்லியில் ஓரளவுக்கு இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது.

* உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் இ இதில் நிறைவாக உள்ளது.

* செரிமானத்துக்கு உதவும் என்சைம்கள் சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி தூண்டுகிறது. இதன்மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லியைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

* இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன.

* கண்ணில் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தைப் போக்குகிறது. வயதாகும்போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைத் தாமதப்படுத்துகிறது அல்லது தடுக்கிறது.

* கொத்தமல்லியில் உள்ள அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் செரிமானத்துக்கு உதவும் என்சைம்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. மேலும், செரிமானத்தைத் தூண்டி, அதன் இயக்கம் ஆரோக்கியமாக இருக்கச்செய்கிறது.

* கொத்தமல்லியைத் தொடர்ந்து சாப்பிட்டுவருபவர்களுக்கு செரிமானப் பிரச்னை பெரும் அளவுக்குக் குறையும்.

* வாந்தி, குமட்டலைப் போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.

* கொத்தமல்லியில் உள்ள லினோலிக், ஒலியிக், பாமிடிக், ஸ்ட்டியரிக், அஸ்கார்பிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறையச் செய்யும்.

* இரத்தக் குழாயின் உட்சுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால், மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

* கொத்தமல்லி ஒரு மிகச்சிறந்த நச்சுநீக்கி, ஆன்டிசெப்டிக், ஆன்டிஃபங்கல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த தாவரம். சருமத்தில் ஏற்படக்கூடிய எக்ஸிமா எனும் தோல் அழற்சி, சருமம் உலர்தல், பூஞ்சைத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளைப் போக்குகிறது.

* நாளமில்லா சுரப்பிகளின் ஆரோக்கியமான செயல்பாட்டைத் தூண்டும் ஆற்றல் கொத்தமல்லிக்கு உண்டு. இதனால், சீரான மாதவிலக்கைத் தூண்டுவதுடன், மாதவிலக்குக் காலத்தில் வரக்கூடிய வலியைக் குறைக்கிறது.