தினமும் புஷ்-அப் உடன் உங்களது நாளை தொடங்கினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.

புஷ்-அப் என்பது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் செய்யப்படும் மிக எளிய உடற்பயிற்சி ஆகும். கைகள் மற்றும் மார்புக்கு வேலை கொடுக்கும் இந்த உடற்பயிற்சியை தினமும் சரியான முறையில் செய்து வந்தால் கைகள், கால்கள், தொடை, இடுப்பு என ஒட்டுமொத்த உடல் தசைகளும் வலுப்பெறும். தினமும் புஷ்-அப் எடுப்பதால் தசைகள் மட்டுமல்ல வேறு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தினமும் புஷ்-அப் செய்வதன் நன்மைகள் :

1. எடை இழப்புக்கு :

தினமும் புஷ்-அப் செய்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் மற்றும் உடலில் இருக்கும் கொழுப்பு குறைய தொடங்கும். இந்த உடற்பயிற்சி குறைந்த நேரத்தில் செய்தாலும் அதிக கொழுப்பை எரிக்க உதவும். எனவே எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.

2. ஆற்றல் அதிகரிக்கும் :

நாளின் தொடக்கத்தை உற்சாகமான உடற்பயிற்சியுடன் தொடங்கினால் எண்டோர்பின்கள் மற்றும் டோபமைன் போன்ற நல்ல ஹார்மோன்களை வெளியிடும் இதனால் நாள் முழுவதும் மன அழுத்தம் இல்லாமல் மனநிலை நன்றாக இருக்கும்.

3. தோரணை மேம்படும் :

தினமும் புஷ்-அப் செய்தால் உடலை நேராக வைத்திருக்க உதவும் மற்றும் முதுகெலும்பை ஆதரிக்கும் தசைகளை செயல்படுத்தும். மேலும் உட்காரும் மற்றும் நடக்கும் நிலையானது மேம்படும். கணினியில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

4. முதுகு தசைகள் பலப்படும் :

புஷ்-அப் வயிறு மற்றும் முதுகெலும்பு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் முதுகு தசைகள் பலப்பட்டு முதுகு வலி குறையும்.

5. தோள்பட்டை மற்றும் மார்பு பகுதியில் வலிமை :

தினமும் புஷ்-அப் செய்து வந்தால் உங்களது தோள்பட்டை மற்றும் மார்பு தசைகள் வலுப்படும். வலுவான தோள்கள் மற்றும் மார்பு மேல் உடலை சமநிலையில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், காயங்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

6. இதயம் மற்றும் நுரையீரலுக்கு நன்மை பயக்கும் :

ஏரோபிக் மற்றும் வலிமை பயிற்சி இவை இரண்டின் கலவை தான் புஷ்-அப். எனவே தினமும் புஷ்-அப் செய்து வந்தால் இதயம் நன்றாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், நுரையீரல் திறனையும் அதிகரிக்கும்.

7. எலும்புகள் ஆரோக்கியம் :

புஷ்-அப் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக எலும்பு தாது அடர்த்திய அதிகரிக்க தினமும் புஷ்-அப் செய்யுங்கள்.

குறிப்பு : புஷ்-அப் செய்யும்போது ஏதேனும் வலி அல்லது அசெளகரியம் ஏற்பட்டால் உடனே செய்வது நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகுங்கள்.