Do you know The beginning of many illnesses I fear is the belly ...

தொப்பை ஏற்பட காரணம்...

ஒருவருக்குத் தொப்பை ஏற்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. பொதுவாக, உடலின் தேவைக்கு ஏற்ற உணவு இன்மை, உடல் உழைப்பு இன்மை போன்ற லைஃப் ஸ்டைல் காரணங்களாலும், ஹார்மோன் கோளாறுகள், மரபுரீதியான பாதிப்பு போன்றவற்றாலும் தொப்பை ஏற்படுகிறது.

தொப்பையின் விளைவு...

தொப்பையும் உடல்பருமனும்தான் பல நோய்களுக்கு தலைவாசல் என்பார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் உட்பட பல பிரச்னைகள் தொப்பையால்தான் ஏற்படுகிறது. எனவே, தொப்பையை எளிதாக எண்ணிவிடாதீர்கள்.

உணவின் பங்கு...

மனிதன் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் நாம் உண்ணும் உணவில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துகள், நார்ச்சத்து, நீர்ச் சத்து ஆகியவை உள்ளன. நம் உடல் இவற்றை குளூக்கோஸாக மாற்றி தனக்கான ஆற்றலைப் பெருக்கிக்கொள்கிறது. 

இப்படி உணவின் மூலம் உடலில் சேகரம் ஆகும் ஆற்றல் நம் உடலின் செயல்பாடுகள் மூலம் எரிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதனுக்கு தினசரி 2,500 கலோரி ஆற்றல் தேவை. நம் உடலின் தேவைக்கு ஏற்ப கலோரியை உடலில் சேர்க்கும்போது உடல் ஆரோக்கியமாகச் செயல்படுகிறது. 

கலோரி அளவு குறைந்தால் சோர்வு ஏற்படுகிறது. கலோரி அளவு அதிகமாக இருக்கும்போது நம் உடல் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என்று கொழுப்பாக அதை மாற்றிவைத்துக்கொள்கிறது. இப்படி வயிற்றுப்பகுதியில் ஏற்படும் கொழுப்பின் தேக்கத்தைத்தான் நாம் தொப்பை என்கிறோம்.

என்ன அவசியம்...

சிலருக்கு தைராய்டு பிரச்னை இருக்கும். தைராய்டு உடலின் தேவைக்குக் குறைவாகச் சுரந்தால் ஹைப்போதைராய்டு பிரச்னை என்பார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டு தொப்பை உருவாகக்கூடும். 

பொதுவாக, தைராய்டு சுரப்புக்குத் தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலமே உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, போதுமான ஓய்வு போன்ற வாழ்க்கைமுறையும் அவசியம்.

மரபியல் தொடர்பு...

பொதுவாக, மரபியல்ரீதியாக உடல் பருமன் தொப்பை இருப்பவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றத்தால் தொப்பை, உடல்பருமனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். சிலருக்கு மரபியல்ரீதியாக ஹார்மோன் கோளாறும் இருக்கும். இவர்கள் அதிக உடல்பருமனாக இருப்பார்கள். 

இவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றம் மட்டுமே போதாது. சதைக்குறைப்பு அறுவைசிகிச்சை, கொழுப்பு நீக்க சிகிச்சை போன்றவை தீர்வாக அமையலாம். ஆனால், தொடர்ந்து உடல் எடை அதிகமாகாமல் இருக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் அவசியம்.

தீர்வு எங்கு இருக்கு?

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்தான் முதல் சாய்ஸ். கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்ற அனைத்தும் நிறைந்த சமச்சீர் உணவுகள்தான் உடலுக்கு அவசியம். எனவே, மூன்று வேளை உணவில் இவை அனைத்தும் சமச்சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

இன்று பெரும்பாலான வீடுகளில் தினசரி மூன்று வேளையும் அரிசி உணவுகளையே உண்கிறார்கள். உடல் உழைப்பு இல்லாமல் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளையே உண்ணும்போது உடலில் தேவையற்ற கொழுப்பு உருவாகி, தொப்பை ஏற்படுகிறது. எனவே தினமும் மூன்றும் வேளையும் அரிசி என்பதை சிறிது மாற்றலாம். 

வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கம்பு, தினை, கேழ்வரகு, குதிரைவாலி, பனிவரகு, சோளம் போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது நல்லது. சிறுதானியங்களில் புரதங்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் என்பதால் சமச்சீரான மெனுவை உருவாக்க சிறுதானியங்கள் உதவும்.

50 வயதைக் கடந்தவர்கள் உணவை ஐந்து வேளையாகப் பிரித்து உண்பது செரிமானத்துக்கு எளிது. இதனால் உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகிறது. அடிக்கடி உண்பதால் பசியும் பெரிதாக இருக்காது. இதனால் உணவின் அளவு குறையும். தேவையற்ற கலோரி சேர்வது தடுக்கப்படும்.

காய்கறிகள், பழங்களில் வானவில் கூட்டணியை உருவாக்குங்கள். அதாவது, தினசரி ஏதேனும் ஒரு வண்ணத்தில் ஒரு காய், பழம் என மெனுவில் சேர்த்திடுங்கள். காய்கறிகளில் வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழு நாட்களுக்கு ஏழு வண்ணங்கள் என உடலில் சேரும்போது அனைத்துவிதமான சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கின்றன.

ஜங்க் ஃபுட்ஸ், எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத் தீனிகள், சாட் ஐட்டங்கள், ஐஸ்கிரீம்கள், சாக்லெட், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் அறவே தவிர்த்திடுங்கள். 

இவைகளில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பும் நிறைவுற்ற கொழுப்பும் நிறைந்துள்ளன. இவை வயிற்றில் தங்கி தொப்பை, உடல்பருமன் ஏற்படுகிறது. மேலும், இதய ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு அடைப்பதால் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட இதய நோய்களுக்கு வாய்ப்பாகிறது.

பழத்தையோ, பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ்களையோ, முளைகட்டிய பயிறு, சுண்டல் போன்றவற்றையோ சாப்பிடலாம். இதனால், நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை காலி செய்து உடலுக்கு வலுவைத் தருகிறது. இதனால், இதய நோய்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.