குறட்டை விடும் பழக்கம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்...

தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் அனைவரிடமும் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனையை நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. 

இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? 

நீரிழிவு நோயைப் பற்றி பரிசோதிப்பவர்கள் கூட குறட்டை விஷயத்தில் அலட்சியம் செய்கின்றனர். பொதுவாகவே மக்கள், நீரிழவு நோய், ரத்த கொதிப்பு மற்றும் வழக்கமான பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்ள முனைகின்றனரே தவிர குறட்டை பற்றி பரிசோதிக்க தயங்குகின்றனர். 

குறட்டை விடும் பழக்கத்தை சரி செய்யாவிட்டால் அது மரணத்தில் கொண்டு போய் சேர்க்கும். குறிப்பாக, குறட்டை பிரச்சனையால் நோய் இல்லாதவர்களுக்கும் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு வருவதோடு புற்றுநோயும் உண்டாகுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நாம் தூங்கும் சமயத்தில், மூச்சுக் குழாய் பாதி அல்லது முழுமையாக அடைத்துக் கொள்ளும் போது குறட்டை ஏற்படுகிறது. அடைப்பினால் உடலுக்கு தேவையான பிராணவாயு குறைவதோடு, கரிமிலவாயு அளவு உடலில் அதிகரிக்கிறது. இதனால் தூக்கத்திலேயே உயிர் பிரியும் அபாயம் அதிகம்.

ஆண், பெண் என பேதம் இல்லாமல் இரு பாலரும் குறட்டையால் பாதிக்கப்படும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது மிக அவசியம். 

குறட்டையை தவிர்ப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மட்டுமே வழிக் கூறமுடியும் என்பதோடு, சில வேளை ‘தொடர் மூச்சுக் காற்று’ கொடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தக்கூடிய வசதியும் தற்போது மருத்துவத்தில் உள்ளது. 

குறட்டையை அலட்சியப்படுத்தாமல் அதனைப் போக்க இயற்கை வழியோ அல்லது ஆங்கில மருத்துவத்தையோ பயன்படுத்தி குறட்டையில் இருந்து விடுபட்டு நீண்ட நாள்கள் வாழுங்கள்.