ஏலக்காய் சாப்பிடுவதால் எவ்வளவு பிரச்சனைகள் தீரும் தெரியுமா?
வாய் துர்நாற்றம் நிறுத்தும்
ஏலம், பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது. எனவே, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும். நறுமணம் தரக்கூடியது என்பதால், உணவு சாப்பிட்டவுடன் இரண்டு ஏலத்தை எடுத்து மென்றுவந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.
இது தவிர ஏலக்காயில் டீ செய்து குடிப்பதும், வெதுவெதுப்பான ஏலக்காய் டீயில் வாய் கொப்பளிப்பதும் வாய் துர்நாற்றத்துக்குச் சிறந்த தீர்வு தரும். வாய்ப்புண் மற்றும் வாயில் ஏற்படும் பல்வேறு கிருமித்தொற்றுகளுக்கும் தீர்வாக அமையும்.
செரிமானத் தொல்லை
இது செரிமானத் தொல்லைகளுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படக்கூடியது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றெரிச்சல் போன்ற பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும். வாய்வு, வயிறு உப்புசம், வயிற்றில் தசைப்பிடிப்பு, வயிற்றுவலி போன்றவற்றுக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. ஏலக்காய் விதைகளை அப்படியே மென்று விழுங்குவதன் மூலம் செரிமானப் பிரச்னைகளைக் குறைக்கலாம் அல்லது இதன் விதைகளைப் பொடியாக்கி, உணவில் தூவலாம்; ஏலக்காயில் டீ தயாரித்தும் குடிக்கலாம்.
விக்கல் போக்கும்!
விக்கலை நிறுத்த உதவுவது ஏலக்காய். இரண்டு ஏலக்காய் விதைகளை மென்று தின்றால் விக்கல் தீரும். இதேபோல் தசைபிடிப்புப் பிரச்னைக்கும் தீர்வு தரும்.
நச்சு நீக்கும்!
இதில் வைட்டமின் ஏ, பி, சி, நியாசின் (Niacin), ரிபோஃபிளேவின் (Riboflavin) போன்றவை இருக்கின்றன. இவை ரத்தத்தைச் சுத்திகரிக்கும். அதிகப்படியான யூரியா, கால்சியம் மற்றும் நச்சுப்பொருட்களை சிறுநீரகத்தில் இருந்து வெளியேற்றும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி, எரிச்சல், சிறுநீரகக்கல் போன்றவற்றைக் குறைக்கும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித்தொற்று சிகிச்சையில் இது பயன்படுத்தப்படுகிறது.
மனஅழுத்தம் குறைக்கும்!
மனஅழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாக, ஏலக்காய் டீ ஆயுர்வேத மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த டீ உடல் நச்சுகளை வெளியேற்றி, உடலில் உள்ள செல்களைப் புதுப்பிப்பதால் மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும்.
சளித் தொல்லைக்கு நிவாரணம்!
சளித்தொல்லையிலிருந்து மீள ஏலக்காய் டீ சிறந்த வழி. தலைவலி, ஆஸ்துமாவுக்கும் இது நல்ல மருந்து. வாந்தி மற்றும் குமட்டலுக்கும் தீர்வு தரும். ஏலக்காயுடன் சிறிது லவங்கப் பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறும்.
பசியின்மை விரட்டும்!
இது, பசியைத் தூண்டும் பொருள்களில் ஒன்று. பசியில்லாமல் இருக்கும் வேளைகளில், ஒன்றிரண்டு ஏலக்காய் விதைகளை மென்றால் பசியெடுக்க ஆரம்பிக்கும்.
தோல் பிரச்னைகள் துரத்தும்!
ஏலக்காய் எண்ணெய் தோலில் உள்ள புள்ளிகளை நீக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் சரும அழகு கூடும். கறுப்பு ஏலக்காய் தோலில் ஏற்படும் அலர்ஜிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
இதயத் துடிப்பை சீர்ப்படுத்தும்!
ஏலக்காயில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்றவை இதயத்துக்கு நன்மை செய்பவை. பொட்டாசியம் உடல் திரவங்கள் மற்றும் செல்களில் உள்ள முக்கியமான ஒன்று. தேவையான அளவு பொட்டாசியத்தை உடலுக்குத் தருவதன் மூலம் இதயத்துடிப்பை சீராக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும். தினமும் இரண்டு கப் ஏலக்காய் டீ குடித்துவந்தால், இந்தப் பலன்களைப் பெறலாம்.