இன்றைய மருத்துவ உலகில் டயாலிசிஸ் (dialysis) அனைவரும் கேள்விப் பட்ட ஒரு வார்த்தை தான். அதைப் பற்றி இன்னும் விவரமாக தெரிந்து கொள்வோமா?

டயாலிஸிஸ்

வெளியக குருதி சுத்திகரிப்புச் செயன்முறை என்று சொல்லலாம். இதனை குருதி மாற்றீடு (blood transfusion) என்று சொல்வதில்லை. அது வேறு. இது வேறு.

டயாலிசிஸின் தேவை

குறிப்பாக சிறுநீரக பாதிப்பு நிகழ்ந்திருந்தால் இந்த டயாலிசிஸ் குறித்து மருத்துவர்கள் சிந்திப்பார்கள்.

நமது வயிற்றுப் புற பின்பகுதியில் அவரை வடிவில் உள்ள இரண்டு வடிகட்டி அங்கங்கள் தான் சிறுநீரகம். இவை இரத்தத்தில் உள்ள யூரியா போன்ற நச்சுக்களையும் மேலதிக உப்பு மற்றும் நீரையும் வடிகட்டி சிறுநீராக வெளியேற்ற உதவுகின்றன. இவை பாதிப்படையும் போது கீழ்ப்படி அறிகுறிகள் தென்படலாம்.

1. களைப்பு.

2. தோல் பிரச்சனைகள். (அரிப்பு உள்ளடங்க)

3. வாந்தி

4. கால், கை மற்றும் கணுக்கால் பகுதிகளில் வீக்கம்.

முழுவதும் சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டு போனால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட காரணம்…

சிறிநீரகங்களின் பாதிப்பில் உடற்பருமன் அதிகரிப்பு பெரும் செல்வாக்குச் செய்கிறது.

குறிப்பாக அது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால். சிறுநீரகங்கள் உயர் ரத்த அழுத்தத்தில் வடிகட்டலை செய்ய வேண்டி ஏற்படுவதால் அவற்றின் நுண் வடிகட்டல் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் நீண்ட கால இதயப் பிரச்சனை உள்ளோர் மற்றும் நீரிழிவு நோய் உள்ளோரிலும் மற்றும் சிறுநீரக தொற்று நோய் கண்டோரிலும்.. இந்த நிலை ஏற்படலாம்.

சிறுநீரக பாதிப்புக்கான மாற்றீடு என்ன

1. டயாலிசிஸ்

இதில் இரண்டு வகை உண்டு.

அ. குருதிசார் டயாலிசிஸ்.

இதன் போது உடற்குருதியை வெளியக சுத்திகரிப்பு கருவி ஊடாக செலுத்தி சுத்திகரித்து மீண்டும் உடலுக்குள் செல்ல அனுமதிப்பது. இதனை செய்வதால்.. பெரிய உயிர் ஆபத்து நிகழும் என்று இல்லை. ஆனால் ஒரு சுத்திகரிப்பு முடிய எடுக்கும் காலம்  3 அல்லது 4 மணித்தியாலங்கள் நீண்டதாக இருக்கும்.

சிலருக்கு இதனை விடக் கூடவாகவும் இருக்கலாம். குருதியின் அளவை மற்றும் குருதி வெளியேற்ற உட்புகு வேகத்தைப் பொறுத்தது. அத்தோடு தேவைக்கு ஏற்ப வாரத்துக்கு.. நான்கு தொடக்கம் இரண்டு தடவைகள் என்று இதனைச் செய்ய நேரிடலாம்.

இதனை கூடிய அளவு வைத்தியசாலையில் வைத்தே செய்வார்கள். சரியான பராமரிப்பு அவசியம் என்பதால். வீட்டில் செய்வதும் உண்டு.. (வசதிகளுக்கு ஏற்ப).

ஆ: பெரிடோனியல் டயாலிசிஸ்

இதன்போது பை மற்றும் குழாய்கள் போன்ற அமைப்புக்களின் உதவியுடன்.. வயிற்றுக் குழியினூடு திரவங்களை செலுத்தி அவை பரிமாறப்பட அனுமதிப்பதன் மூலம்.. தேவையானவை உடலுக்குள் போக தேவையற்ற கழிவுகள் உடலில் இருந்து அகற்றப்படும். இது ஒரு பழைய முறை என்றாலும் தேவைக்கு ஏற்ப பாவிக்கிறார்கள். இதனை வீட்டில் இருந்தும் செய்யலாம்.

இது 30 – 40 நிமிடங்கள் நீடிக்கும். நாள் ஒன்றுக்கு 3 தொடக்கம் 4 தடவைகள் செய்வார்கள். அல்லது இரவு முழுவதும் செய்யக் கூடியதாக இருக்கலாம்.

2. சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை.

டயாலிசிஸ் மூலம் பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை அல்லது டயாலிசிஸ் அடிக்கடி செய்வது சிரமம் என்று காணப்படும் நோயாளிகளில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவது உண்டு.

அதற்கு தகுந்த சிறுநீரகம் கிடைக்கப் பெறுதல் வேண்டும். அதற்கான காத்திருப்புக் காலம் நீண்டது என்பதால்.. அந்தக் காலத்தில் நிச்சயம் டயாலிசிஸ் நோயாளிகள் உயிர் வாழ உதவும்.

டயாலிஸிஸ் செய்வதால் ஆயுள் பாதிக்கப்படுமா?

டயாலிஸிஸ் பொறிமுறை என்பது சிறுநீரகங்களின் செயலை செய்தாலும் சிறுநீரகங்கள் போலவே அச்சொட்டாக செயற்படுகின்றன என்று சொல்ல முடியாது. ஆனாலும் இளையோரில் இதன் மூலம் அவர்களின் ஆயுளை 20.. 30 வருடங்களுக்கு நீட்ட முடியும்.

70 75 க்கு மேற்பட்ட வயதானோரில்.. வாழ்க்கைக் காலத்தை 5 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மூலம் பொதுவாக.. ஆயுள் காலத்தை 5 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். அதற்கு மேல் வாழ்பவர்களும் உண்டு