Daily exercise is good for Uterine
ஃபைப்ராய்டு என்பது கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய தசைக்கட்டி. பொதுவாக குழந்தைப் பேறுக்கு முன்பு இப்பிரச்னை ஏற்படும். கர்ப்பப்பையில் எங்கும் வரலாம்.
சப்செரோசல் எனும் ஃபைப்ராய்டு கர்ப்பப்பையின் வௌிப்புறத்தில் வரக்கூடியது. இரண்டாவது வகை இன்ட்ராமியுரல் பைப்ராய்ட்ஸ் இது கர்ப்பப்பையின் வௌிப் பகுதி மற்றும் உள் சுவற்றில் வரக்கூடியது.மூன்றாவது வகை சப்மியுகோசல் ஃபைப்ராய்ட்ஸ் இது கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் வரும். இவ்வகையான கட்டிகள் வருவது பெரும்பாலும் குறைவே.
மருத்துவ ரீதியாக உறுதியான காரணங்கள் இதுவரை இல்லை. ஆனால் மரபியல் காரணங்கள் சுற்றுப்புறச்சூழல், உணவுமுறை மாற்றம் என பல காரணங்களை மருத்துவர்கள் சொல்கிறது.
மாதவிடாய் நாட்களில் அதிக வலி, அதிக ரத்தப் போக்கு, குழந்தை பேறு தடைபடுவது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு,மலச்சிக்கல், கட்டி பெரிதாக இருந்தால் பக்கத்து உறுப்பில் தாக்கம் ஏற்பட்டு சில தொந்தரவுகள் ஏற்படலாம்.
குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு இது ஏற்படலாம். ஹார்மோன் சீரற்று உள்ள பெண்களுக்கும் வரலாம். சமச்சீரற்ற உணவுமுறை பழக்கம் உள்ளவர்களுக்கும் இது வரலாம்.
பெரும்பாலும் குழந்தைப் பேறை பாதிப்பது உள்சுவரில் ஏற்படும் சப்மியுகோசல் எனப்படும் கட்டிகள்தான். இதோடு இன்ட்ராமியரல் வகை கட்டிகள் அளவில் பெரியதாக இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்படும். சில சமயங்களில் சினைப்பைகளிலும் கட்டிகள் வரலாம்.
அப்படி வரும் போது கருவுற்று இருந்தால் இந்தக் கட்டிகள் மேற்கொண்டு கரு வளர்ச்சியடைவதை தடுத்து பிரச்னைகளை உண்டாக்கலாம்.
மருந்து மாத்திரைகள் இதற்கு தீர்வாகாது. சப்செரோசல் கட்டிகளுக்கு சிகிச்சை தேவையில்லை.
காரணம் இதனால் பெரிதளவில் பாதிப்பேதும் இல்லை. இன்ட்ராமியுரல் வகை கட்டிகளை லேப்ராஸ்கோப்பி மயோமக்டெமி மூலமாக எளிதில் அகற்றலாம். சப்மியுகோசல் கட்டிகளை அகற்ற, ஹீஸ்ட்ரோஸ் கோபிக் மயோமக்டெமி என்ற சிகிச்சை செய்யலாம். இதனால் வலியோ பாதிப்போ ஏற்படாது.
ஃபைப்ராய்டு கட்டிகள் வராமல் தடுக்க தடுப்பு வழிகள் ஏதும் கிடையாது. ஆனால் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி உடல் உழைப்பு இருந்தால் கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள் மட்டுமல்ல கர்ப்பப்பையில் ஏற்படும் தொந்தரவுகளையும் விரட்டலாம்.
