காலையில் தூங்கி எழும்போது முகம் வீங்கி இருப்பதற்கான காரணங்கள் மற்றும் அதை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நம்மில் பலருக்கும் காலை தூங்கி எழும் போது முகம் வீங்கி இருக்கும். இது ஒரு பொதுவான பிரச்சனையாகும். பொதுவாக இந்த வீக்கம் உதடுகள், கன்னங்கள், கண் இமைகளில் ஏற்படும். சில சமயங்களில் தொண்டை அல்லது கழுத்து பகுதியிலும் கூட இருக்கலாம். முக வீக்கத்தை ஏற்படுத்தும் பல காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முகம் வீங்குவதற்கான காரணங்கள்:
1. உப்பு:
இரவு நீங்கள் அதிக உப்பு உள்ள உணவுகளை சாப்பிட்டால் இந்த பிரச்சனை வரலாம். இது தவிர தலையணையில் முகத்தை புதைந்து தூங்கினாலும் இது நிகழும். இரவில் துரித உணவுகளை சாப்பிட்டாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.
2. அழகு சாதன பொருட்கள் :
முகத்தில் அல்லது தோலில் பூசும் அழகு சாதன பொருட்கள், கிரீம்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தினாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.
3. ஆல்கஹால்
இரவு மது அருந்து விட்டு தூங்குபவர்களுக்கு கண் மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்படும். ஏனெனில் மது உடலை நீரிழிப்பு செய்யும். அதுமட்டுமல்லாமல் இது நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எடிமா போன்ற நிலையையும் ஏற்படுத்தி விடும். மது அருந்திவிட்டு தூங்கினால் நல்ல தூக்கம் வரும் என்று பலரது நினைப்பு. ஆனால் அது அப்படி அல்ல. உண்மையில், மது தூக்கத்தை கெடுக்கும், மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும் மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
4. குறைவாக தண்ணீர் குடிப்பது
நிபுணர்களின் கூற்றுப்படி நாம் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடித்தால் நீர்த்தேக்கம் ஏற்படாது. ஒருவேளை குறைவாக தண்ணீர் குடித்தால் வீக்கம் ஏற்படும்.
5. குறைவான தூக்கம்
நீங்கள் ஒரு நாளைக்கு 7-8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு அதிகரித்து, உடலில் அதிக தண்ணீரைப் பிடித்துக் கொள்ளும். இதனால் முகத்தில் வீக்கம் ஏற்படலாம்.
6. குறட்டை
குறட்டை விடுபவர்களுக்கும் முகத்தில் வீக்கம் ஏற்படும். ஏனெனில் குறட்டையின் போது தொண்டையில் உள்ள தசைகள் இறுக்கமடைவதால் இது ஏற்படுகிறது. மேலும் இதனால் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்படும். இது தவிர உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, தைராய்டு போன்ற பிரச்சனைகளாலும் முகத்தில் வீக்கம் ஏற்படும்.
தீர்வு உண்டா?
- முகத்தில் ஏற்படும் இந்த வீக்கம் சிறிது நேரம் கழித்து தானாகவே மறைந்துவிடும். மேலும் முகத்தை லேசாக மசாஜ் செய்வதன் மூலமும் இதை போக்கலாம். ஐஸ் ஒத்தடம் கூட செய்யலாம்.
- இரவில் லேசான உணவு சாப்பிடுவதால், நன்றாக தூங்குதல் போன்றவையும் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் தூங்கி எழு உதவும்.
- அதுமட்டுமில்லாமல் மது அருந்துவதை தவிர்க்கவும், சீக்கிரமாக தூங்க செல்லவும். மேலும் காலையில் சீக்கிரமாக எழவும். இவை அனைத்தும் கூட முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தாது.
