மார்பகப் புற்றுநோய்

ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை.

பெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டாலோ, அல்லது வலி இருந்தாலோ, உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். மேலும் மார்பகக் காம்புகளில் நீர் அல்லது ரத்தம் வடிந்தாலும் ஆபத்தே. சிலருக்கு கட்டி இருந்து வலி இல்லை என்றாலும் அபாயமே. அதனால் அவர்களும் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

1.. மேமோகிராஃபி:-

மேமோகிராஃபி என்று அழைக்கப்படும் முலை ஊடு கதிர்ப் படம். மேமோகிராஃபி இயந்திரத்தில் தட்டு ஒன்று இருக்கும். அதன் மேல் மார்பகத்தை வைக்க வேண்டும். அந்த மார்பகத்தின் மீது ஒரு அழுத்தும் கருவி வைக்கப்படும். மார்பகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாக அறிய முடியும்.

பல்வேறு கோணங்களில் மார்பகத்தைப் படம்பிடித்து ஆராய வேண்டும். இந்த முறையில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, பெண்ணுக்கு வேதனை அதிக அளவில் இருக்கும். இதனால், பல பெண்கள் மேமோகிராஃபி பரிசோதனை என்றாலே பயந்து அதைத் தவிர்ப்பார்கள்.

2.. நவீன மேமோகிராஃபி பரிசோதனை:-

மேமோகிராஃபி இயந்திரம் நவீனமாகிவிட்டது. மார்பகத்தை வைக்கும் தட்டு அப்படியே இருக்கும். ஆனால், முன்பைப்போல அழுத்தம் கொடுக்கும் கருவி தேவை இல்லை. அதற்குப் பதில் ஊடு கதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் மார்பில் செலுத்தி மார்பின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காண முடிகிறது. இதில் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த ஊடு கதிர்களால் ஆபத்து விளையுமோ என்று அச்சப்படத் தேவை இல்லை. இந்த ஊடு கதிர்களின் அபாயத்தன்மை மிக மிகக் குறைவு. மேலும், இந்தப் பரிசோதனை முழுக்க முழுக்கப் பெண்களாலே செய்யப்படுவதால், கூச்சப்படவும் அவசியம் இல்லை.

புற்று நோய்க்கு ஆரம்பத்தில் சிகிச்சை மேற்கொண்டால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 95 சதவிகிதம் உறுதி. தாமதமாகக் கண்டறியும் பட்சத்தில், முதலில் மார்பகத்தை எடுக்க வேண்டி வரும். அப்போதும் எலும்புகள் வரை புற்று நோய் பரவி இருந்தால், உயிர் பிழைப்பது கடினம்!

ஒரு பக்கத்தின் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டால், இன்னொரு பக்கத்தின் மார்பகத்திலும் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இளம் பெண்களுக்கு இந்த நோய் தாக்குதல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு மார்பகத்தில் வீக்கம் ஏற்படுவதை, ப்ரீஸ்ட் லம்ப் என்பார்கள். இதனை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமே கண்டறிந்துவிட முடியும். தேவைப்பட்டால் மட்டுமே, மேமோகிராஃபி மேற்கொள்ள வேண்டும்.

வயதான பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து மேமோகிராஃபி பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமானதும், மார்பகப் புற்றுநோயை விரைவில் கண்டறிந்து அதிலிருந்து தப்புவதற்கான வழியும் ஆகும்.