யூரிக் அமில அளவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வாழ்க்கையில் முறையில் சில மாற்றங்களைக் மட்டும் செய்தால் போதும். அவை என்னவென்று இங்கு காணலாம்.
இன்றைய காலத்தில் பலரும் யூரிக் அமில பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். யூரிக் அமிலம் என்பது உடல் பியூரின்களை உடைக்கும்போது உருவாகும் ஒரு இயற்கை கழிவு பொருள். இது சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் சிறுநீரக கற்கள், கீழ்வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும் உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன? யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதற்கான காரணங்களும் தீர்வுகளும்...
1. இறைச்சி உட்கொள்ளல் :
இறைச்சி அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக சிவப்பு இறைச்சியை உட்கொள்ளுவதை குறைப்பது நல்லது. ஏனெனில் அவற்றில் பியூரின்கள் அதிகமாக உள்ளன. அவை உடலில் யூரின் அமல அளவை அதிகரிக்க செய்யும்.
2. மது அருந்துதல் :
அதிகப்படியான மது அருந்துதல் உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கும் எனவே அதை அளவோடு குடியுங்கள். ஆனால் முற்றிலும் நிறுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
3. சர்க்கரை பானங்கள் :
சர்க்கரை பானங்கள் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது. அது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்க செய்யும். எனவே இவற்றை முற்றிலும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
4. எடை கட்டுப்பாடு :
அதிகப்படியான எடை வளர்ச்சிதை மாற்ற கோளாறுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல் உடலில் யூரிக் அமில அளவையும் அதிகரிக்க செய்யும். எனவே வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகள் மூலம் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
5. தினசரி உடற்பயிற்சி :
யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும் வகையில் வாக்கிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற குறைந்த தாக்கம் கொண்ட ஏதேனும் ஒரு பயிற்சியை செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
6. வைட்டமின் சி நிறைந்த உணவுகள் :
சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமாக உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை யூரிக் அமில அளவை குறைக்க பெரிதும் உதவும்.
7. குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள் :
தயிர், சீஸ் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களையும், முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் அதிகமாக சாப்பிடுங்கள்.
8. நிறைய தண்ணீர் குடி!
நாள் முழுவதும் அதிக தண்ணீர் குடிப்பது யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதை அதிகரிக்கும் மற்றும் சிறுநீரகங்களில் படிக்கங்கள் உருவாகும் வாய்ப்புகளையும் குறைக்கும்.
9. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது :
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் உயர் இரத்த சர்க்கரையானது யூரிக் அமில அளவை பாதிக்கும் எனவே உங்களது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.


