Soya Milk: சைவப் பிரியரா நீங்கள்? இந்தப் பாலையும் குடித்துப் பாருங்கள்: ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்!
நம் மக்களில் சிலர் தற்போதைய காலகட்டத்தில் சைவ உணவு சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில், சைவ உணவுகளில் தான் அதிக ஆரோக்கியம் நிறைந்துள்ளது என்பது கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. சைவ உணவு உண்ணும் போக்கு அதிகரித்து வருவதனால், சிலர் மாடுகளிலிருந்து பெறப்படும் பாலை கைவிடவும் நினைக்கின்றனர். முழுவதுமாக சைவத்திற்கு மாற வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு சோயா பால் மிகவும் சிறந்ததாக அமையும்.
சோயா பால்
சோயாபீன்களில் இருந்து தயாரிக்கப்படுவது தான் சோயா பால். இதில் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கிறது. ஆகையால், அடிக்கடி சோயா பால் குடிப்பதை வழக்கமாக்கி கொள்வதும் நல்லது தான். சோயா பாலில் குறைந்த அளவிலான கலோரிகள், அதிக அளவில் புரதம், கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக உள்ளது.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ள நபர்களுக்கு சோயா பால், ஆரோக்கியமான பால் மாற்றாகும். சோயா பால் குடிப்பதனால், நமது உடலுக்கு என்னென்ன வகையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
சோயா பாலின் நன்மைகள்
- சோயா பால் குடிப்பதனால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஏனெனில், கால்சியத்தின் மிகச் சிறந்த மூலமாக இந்தப் பால் உள்ளது.
- சோயா பாலைத் தொடர்ந்து அடிக்கடி குடிப்பதால், பெண்களுக்கு ஆரம்பகால மாதவிடாய் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கும் என்றும் பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
- இதயத்திற்கு நன்மை அளிக்கும் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் சோயா பாலில் அதிகளவில் நிறைந்துள்ளது.
- இது பிளாஸ்மா லிப்பிட் அளவினை மேம்படுத்த உதவி புரிகிறது. மேலும், எதிர்காலத்தில் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவி செய்கிறது.
- சோயா பாலில் அதிகளவில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த பானமாக இருக்கிறது.
- குழந்தைகளுக்கு சத்தான கீரை காரப் பொங்கல் இப்படி செய்து கொடுங்கள்!
உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் சோயா பாலை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலனைப் பெற முடியும்.
தினந்தோறும் சோயா பாலை குடித்து வர உடலில் இருக்கும் கூடுதலான எடையை குறைக்க முடியும்.
சோயா பாலின் நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் தான், பலரும் சோயா பாலை இன்னமும் குடிப்பதற்கு முன்வரவில்லை. சோயா பாலில் நிறைந்துள்ள அற்புத நன்மைகள் அனைவருக்கும் தெரிந்து விட்டால், பிறகு அடிக்கடி சோயா பாலினை குடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.