பாகற்காயில் இப்படி ஒருமுறை குழம்பு செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பே தெரியாது.. ருசியா இருக்கும்!
Pavakkai Kulambu Recipe : கசப்பில்லாமல் ருசியான சுவையில் பாகற்காய் குழம்பு செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே, பாகற்காயை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். காரணம் அதன் சுவை கசப்பு. அப்படியானால், உங்களுக்கும் பாகற்காய் பிடிக்காது என்றால், ஒருமுறை அதில் குழம்பு செய்து சாப்பிடுங்கள். பொரியல் வச்சா கூட சாப்பிட மாட்டேன், இதில் குழம்பு வைத்து சாப்பிடுவதா என்று யோசிக்கிறீர்களா? ஆனால், ஒருமுறை இந்த குழம்பு வைத்து சாப்பிடுங்கள்,
ஒரு தட்டு சோறு சாப்பிட்டும், எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவீங்க. ஆம், இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையில் நீங்கள் குழம்பு வைத்து சாப்பிட்டால் குழம்பில் கசப்பு தெரியாது மற்றும் சாப்பிடுவதற்கும் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு ரொம்பவே சுலபமானது. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பாகற்காய் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ருசியான பூண்டு குழம்பு இப்பவே செஞ்சு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
பாகற்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 200 கிராம்
புளி - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 15 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
வெல்லம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
இதையும் படிங்க: கேரளா ஸ்டைலில் சின்ன வெங்காயம் புளிக்குழம்பு.. ரெசிபி இதோ!
செய்முறை :
பார்க்க குழம்பு செய்ய முதலில் பாகற்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு திரட்டி கொள்ளுங்கள் பிறகு அதை சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும். இதனை அடுத்து, புளியை சூடான தண்ணீரில் சுமார் 20 நிமிடம் வைத்து, பிறகு அதிலிருந்து சாற்றை பிழிந்து, அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்கு மையாக வதக்கவும்.
பிறகு அதில் வதைக்கிய பாகற்காயும் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பின் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அடுத்து அதில் புளி சாற்றை சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடைசியாக சிறிதளவு வெல்லத்தை சேர்த்து சுமார் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். அவ்வளவுதான் கசப்பில்லாமல் ருசியான பாகற்காய் குழம்பு ரெடி. சூடான சாதத்திற்கு இந்த குழம்பு ஊற்றி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D