சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் 'சோயா கட்லட்' ... எப்படி செய்வது..?
சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் சோயா கட்லட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
வெஜ் கட்லெட், சிக்கன் கட்லெட், என பல வகையான கட்லெட்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாவற்றையும் விட சோயா கட்லெட்டின் சுவை சற்று கூடுதலாக இருக்கும் என்றே சொல்லலாம். இது மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இது மிகவும் சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகும். பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு சுட சுட ஏதாவது சாப்பிட நினைப்பார்கள். அதற்கென, நீங்கள் வழக்கம் போல் வடை, போண்டா, பஜ்ஜி என செய்து கொடுப்பதற்கு பதிலாக இந்த சுவையான சோயா கட்லெட் செய்து கொடுங்கள்.
இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக, குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் சோயா கட்லெட் இருக்கும். எனவே, இப்போது சோயா கட்லெட் செய்வது எப்படி, அதை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் குறித்து இந்த சமையல் தொகுப்பில் நாம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படிங்க: சுவையான முட்டை மஞ்சூரியன் இனி நீங்களும் வீட்ல செய்யலாம்.. ரெசிபி இதோ!
சோயா கட்லெட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 1 கப் (50g)
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
துருவிய கேரட் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மைதா மாவு - 2 ஸ்பூன்
வத்தல்பொடி - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லி தழை - சிறிதளவு
பிரெட் கிரம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: Banana Halwa : வாழைப்பழம் இருக்கா..? அப்ப 'அல்வா' செய்யலாம் வாங்க.. ரெசிபி இதோ!!
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் அதில் மீள் மேக்கர் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைக்க வேண்டும். பிறகு அதிலிருந்து
- தண்ணீரை நன்கு பிழிந்து, மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது ஒரு Panல் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அவற்றின் பச்சை வாசனை போன பின் வத்தல்பொடி, மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் துருவிய கேரட்டை சேர்க்கவும்.கேரட் வெந்த பின், அரைத்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்க்க வேண்டும். அதன் பிறகு, வேக வைத்து எடுத்துள்ள உருளை கிழங்குகளை நன்றாக மசித்து அதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின் அதில்சிறிது மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- இப்போது தயாராக இருக்கும் இந்த மசாலாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில், கொஞ்சம் மைதா மாவு எடுத்து அதை தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது ரெடியாக உள்ள கட்லெட்டுகளை மைதா மாவில் டிப் செய்து பின் பிரெட் கிரம்சில் நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும்.
- பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வைத்து கட்லெட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் இப்போது சுவையான, சுட சுட சோயா கட்லட் ரெடி!! இந்த கட்லட்டை நீங்கள் டொமேட்டோ கெட்சப் மற்றும் புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D