உத்தரப் பிரதேசம், அவுரையாவில் பானிபூரி சாப்பிட்டபோது ஒரு பெண்ணின் தாடை விலகியதால், அவரால் வாயை மூட முடியவில்லை. வலியால் துடித்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அங்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா நகரில், சாதாரணமாக பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு எதிர்பாராத அதிர்ச்சி நிகழ்ந்துள்ளது. பானிபூரியைச் சாப்பிடுவதற்காக வாயை நன்றாகத் திறந்தபோது, அவரது தாடை விலகியதால், வாயை மூட முடியாத நிலை ஏற்பட்டது. பயங்கர வலியுடன் துடித்தபடியே அவர் மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விலகிய தாடை எலும்பு
டைம்ஸ் ஆஃப் இந்தியா (TOI) அறிக்கையின்படி, அவுரையாவைச் சேர்ந்த இன்கிலா தேவி என்ற பெண், தனது உறவினர் ஒருவருடன் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றபோது, சாலையோர கடையில் பானிபூரி சாப்பிடச் சென்றுள்ளார்.
அவர் வழக்கம்போல் பெரிய பானிபூரி ஒன்றைக் கடித்துச் சாப்பிட முயன்றபோது, வாயை மிகவும் அகலமாகத் திறந்துள்ளார். அப்போது அவரது கீழ்த்தாடை எலும்பு அதன் இயல்பான நிலையிலிருந்து விலகி, அவரது வாய் அகலமாகத் திறந்த நிலையிலேயே சிக்கிக் கொண்டது.
சிகிச்சையில் சிக்கல்
தாடை விலகியதால், இன்கிலா தேவியால் வாயை மூட முடியவில்லை. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சையளிக்க முயன்றனர்.
ஆனால், ஆரம்பக்கட்ட சிகிச்சையில் தாடையை எளிதில் மீண்டும் பொருத்த முடியவில்லை. தாடை விலகல் சுலபமாகச் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சிக்கலாக இருப்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர். நிலைமை மோசமடைந்ததால், அவரை வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பானிபூரி ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


