சாதாரணமாக முட்டை கிரேவி, ஆம்லேட் இரண்டையும் தனித்தனியாக தான் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் ஒருமுறை ஆம்லேட் செய்து, அதில் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்க. அதுக்கு பிறகு இந்த டிஷ்ஷை விடவே மாட்டிங்க. ஈஸியா செய்து விடலாம்.
முட்டை ஆம்லேட் குழம்பு என்பது வீடுகளில் அதிகம் செய்யப்படும் ஒரு சுவையான, காரமான மற்றும் மணம் தூக்கும் தென்னிந்திய உணவு. சாதம், இடியாப்பம், பரோட்டா, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் இதன் சுவை பல மடங்கு அதிகரிக்கும். நமது பாரம்பரிய முட்டை குழம்பை விட, ஆம்லேட் குழம்பு ஒரு தனித்துவமான சுவை கொண்டதாகும். இது முட்டையை நேரடியாக கறியில் போடாமல், முன்னதாக ஆம்லேட்டாக செய்து, பிறகு குழம்பில் சேர்ப்பதால் அருமையான சுவையாக இருக்கும்.
முட்டை ஆம்லேட் கிரேவி செய்முறை :
தேவையான பொருட்கள் :
ஆம்லேட் தயாரிக்க:
முட்டை – 3
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
தினமும் கோழிக்கறி சாப்பிடுபவரா நீங்கள்? ...இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க
குழம்பு தயாரிக்க:
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நன்றாக அரைத்தது)
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 5 பல் (நறுக்கியது)
சோம்பு – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கோழி மசாலா தூள் – 1/2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – 1/2 கப் (விருப்பப்பட்டால்)
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் முட்டை, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து விடவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- தயார் செய்த முட்டை கலவையை கடாயில் ஊற்றி நன்கு வேகும்வரை சுடவும்.
- வெந்த பிறகு, ஆம்லேட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- அதில் சோம்பு, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளி அரைத்து சேர்த்து, தண்ணீர் விட்டுக் கிளறவும்.
- பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கோழி மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- இப்போது தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும், வெட்டி வைத்த ஆம்லேட் துண்டுகளை அதில் சேர்க்கவும்.
- ஆம்லேட்டை சேர்த்த பிறகு அதிகமாக கிளற வேண்டாம்; இல்லையெனில் அது குழம்பில் கரைந்துவிடும்.
- மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் வேக விடவும், அதற்குள் ஆம்லேட் குழம்பின் சுவையை உறிஞ்சும்.
- கடைசியாக தேங்காய் பால் (தேவைப்பட்டால்) சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
- மேலே கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, தீயை அணைக்கவும்.
எந்த உணவுகளுடன் சாப்பிடலாம்?
சூடான வெள்ளை சாதம், சுடச்சுட பரோட்டா, இடியாப்பம், ஆப்பம் போன்ற மென்மையான உணவுகளுடன், கம்பு தோசை, ராகி தோசை போன்ற ஆரோக்கிய உணவுகளுக்கு கூட இது ஒரு சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும்.
உங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லையா?...இந்த 5 வழிகளை டிரை பண்ணி பாருங்க
சுவையை அதிகரிக்க :
-ஆம்லேட் துண்டுகளை பெரிதாக வெட்ட வேண்டும் . இல்லையெனில் அது குழம்பில் கரைந்துவிடும்.
- தக்காளியை நன்கு அரைத்து பயன்படுத்த வேண்டும் .இது குழம்பிற்கு நல்ல அடர்த்தி தரும்.
- தேங்காய் பால் சேர்ப்பது கட்டாயமில்லை . ஆனால் அது சுவைக்கு மெருகூட்டும்.
- சோம்பு மற்றும் பூண்டு சேர்ப்பது குழம்பிற்கு தனி மணம் மற்றும் சுவை தரும்.
- குழம்பு அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. இல்லையெனில் ஆம்லேட் மிகவும் மெதுவாகிவிடும்.
