பொதுவாக அல்வா என்றால் கோதுமை மாவில் தான் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமாக இருக்க கேழ்வரகில் அல்வா செய்து சாப்பிட்டு பாருங்க. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியதும் ஆகும்.
ராகி (கேழ்வரகு) என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவாகும். இது உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகச் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவாக விளங்குகிறது. ராகியை பலவிதமாக உணவில் சேர்க்கலாம். ஆனால் இனிப்பு விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய ராகி அல்வாவாக செய்து பாருங்க. நெய், நாட்டு சர்க்கரை (அல்லது கருப்பட்டி), மற்றும் பால் சேர்த்து தயாரிக்கப்படும் ராகி அல்வா, ஒரு மென்மையான, நெய் வழியும், ஊட்டச்சத்து நிறைந்த, இனிப்பு உணவாக அமையும்.
ராகி அல்வா செய்ய தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1 கப்
நாட்டு சர்க்கரை / கருப்பட்டி / வெல்லம் – 3/4 கப்
பால் – 2 கப்
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
தலையணை இல்லாமல் தூங்குவது நல்லதா? கெட்டதா?
ராகி அல்வா செய்முறை :
- முதலில், நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் வைத்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். அதில் உள்ள அழுக்கு நீக்க, ஒரு வடிகட்டியில் நெய்யால் தடவிய துணியை வைத்து வடிகட்டவும்.
- ஒரு பெரிய கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, ராகி மாவை மிதமான தீயில் 5 நிமிடங்கள் நன்கு வறுக்கவும்.
- ராகி மாவு நறுமணமாக மாறும் வரை கிளற வேண்டும். (இது அல்வாவிற்கு நல்ல மென்மையைக் கொடுக்கும்.)
- வறுத்த ராகி மாவில் பாலை மெதுவாக சேர்த்து கிளறவும்.
- பிறகு கரைந்த நாட்டு சர்க்கரை நீரைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
- தொடர்ந்து கிளறிக்கொண்டே இருங்கள். இது ராகி அல்வாவை கட்டியாகாமல், மென்மையாக இருக்க உதவும்.
- மீதமுள்ள நெய்யை (2 டேபிள்ஸ்பூன்) கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை அல்வாவாக மாற்றவும்.
- முந்திரி வறுத்து சேர்த்து, ஏலக்காய் தூள் தூவி இறக்கவும்.
ராகி அல்வாவின் ஆரோக்கிய நன்மைகள் :
- ராகியில் இரும்புச்சத்து, கால்சியம், மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தினமும் சாப்பிடலாம்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இனிப்பு . வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்ப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
- மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் . பெண்கள் ஹார்மோன் சமநிலைக்காக இதை உணவில் சேர்க்கலாம்.
- சோம்பல் குறைக்கும், உடலுக்கு வலுவூட்டும் . தினமும் ஒரு சிறிய அளவு சாப்பிட்டாலே உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்.
பரிமாறும் முறைகள் :
- வெதுவெதுப்பாக இதமான சூட்டில் பரிமாறினால் மென்மையாக இருக்கும்.
- சிறிது நெய் மற்றும் காய்ந்த திராட்சை தூவினால், மேலும் நறுமணமாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு சிறிது பன்னீர் அல்லது பாதாம் தூள் சேர்த்தால், அது கல்யாண வீட்டு ஸ்டைல் ராகி அல்வா ஆகும்.
- குளிர்ந்த நிலையில் வைத்து சாப்பிட்டால், அது ராகி பர்பி போலவும் இருக்கும்.
