கொழுப்பை கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவும் "கொள்ளு குருமா"!
கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு பொரியல், கொள்ளு பொடி என்று பல வகையான ரெசிபிக்களை கொள்ளு வைத்து செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கொள்ளு குருமா செய்து பார்க்க உள்ளோம்.
இந்த நவீன உலகத்தில் நம்மில் அதிகமானோர் அயராத உழைப்பினால் ,மிக விரைவில் உடல் சோர்வு அடைகிறோம்.பின் சுலபமாக செய்யும் உண்வுகள், துரித உணவுகள் என்று எளிதில் செய்து சாப்பிடும் உணவுகளையம் மற்றும் ஊட்டச்சத்தில்லா உணவுகளையும் சமைத்து சாப்பிடுகிறோம்.
இதனால் அதிகமானோர் சந்திக்கும் ஒரு பிரச்னை அதிக உடல் பருமன், மூட்டு வலி என்று பல வகையான உடல் பிரச்சனைகளை சந்திக்கின்றோம்.
நம்மில் பலர் உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி, நடை பயிற்சி என்று செய்தும் பலன் இல்லாமல் அவதி படுவதை கண் கூடாக பார்க்கிறோம்.
உடல் பருமனை, இயற்கையாக குறைக்க ஒரு அற்புத தானியம் தான் கொள்ளு. கொள்ளு உடலில் தங்கி இருக்கும் கொழுப்பினை கரைத்து, உடல் பருமனை குறைத்து விடும் தன்மை பெற்றது. எனவே கொள்ளினை அன்றாடம் நாம் செய்யும் உணவு வகைகளில், தொடர்ந்து சேர்த்து வந்தால், நிச்சயமாக உடல் எடையை குறைத்து விடலாம்.
கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு பொரியல், கொள்ளு பொடி என்று பல வகையான ரெசிபிக்களை கொள்ளு வைத்து செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கொள்ளு குருமா செய்து பார்க்க உள்ளோம். இதனை இட்லி, தோசை , சப்பாத்தி போன்றவற்றிக்கு தொட்டு சாப்பிடலாம். சத்தான கொள்ளு குருமா எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1 கப்
மசித்த உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 முடி
முந்திரி - 6
சோம்பு - 1/2 ஸ்பூன்
பிரிஞ்சி - 1
மல்லித் தழை –கையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கொள்ளை சுமார் 8 மணி நேரங்கள் வரை ஊற வைத்துக் கொண்டு, பின் அதனை தண்ணீர் இல்லாமல், வடித்துக் விட்டு, ஒரு குக்கரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, 4 விசில் விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் உருளைக்கிழங்கினை வேக வைத்துக் கொண்டு, மசித்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளி,வெங்காயம் ஆகியவற்றை பொடியாக அரிந்துக் கொள்ள வேண்டும்.ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடான பிறகு சோம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொண்டு, பின் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் தக்காளி சேர்த்து ,வதக்கி விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, அதன் கார வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
அவற்றின் கார வாசனை சென்ற பிறகு, மசித்து எடுத்து வைத்துள்ள உருளை கிழங்கினை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி கொதிக்க வைக்க வேண்டும். இப்போது வேக வைத்து எடுத்துள்ள கொள்ளினை சேர்த்து கிளறி விட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து , 2 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு, மல்லித்தழையை தூவினால், சத்தான கொள்ளு குருமா ரெடி!