க்ரிஸ்பி & ஹெல்த்தியான பாகற்காய் சிப்ஸ் செய்வோமா?
இன்று நாம் க்ரிஸ்பியான பாகற்காய் சிப்ஸ் வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் பலரும் பாகற்காய் என்றவுடன்,கசப்பாக இருக்கும் என்று தான் ஞாபகம் வரும்.ஆனால் பாகற்காய் வைத்து பல விதங்களில் சத்தான ரெசிபிக்களை செய்யலாம்.அந்த வகையில் இன்று நாம் பாகற்காய் சிப்ஸை காண உள்ளோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் , நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை இருக்கும்.
வழக்கமாக நாம் உருளைக்கிழங்கு சிப்ஸ், நேந்திரம் சிப்ஸ், மரவல்லி கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தான் அதிகமாக சுவைத்து இருப்போம். இன்று நாம் க்ரிஸ்பியான பாகற்காய் சிப்ஸ் வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பாகற்காயானது நமக்கு பல விதங்களில் ஆரோக்கிய நலன்களை தருகிறது. இது உணவுப் பையில் இருக்கும் பூச்சியைக் கொல்லும்.இயற்கையாக பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. மேலும் இது பித்தத்தைத் தணிக்கும்.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.மேலும் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும்.இதனை வாரம் 2 முறையாவது எடுத்துக் கொண்டால், இரைப்பு, இருமல், வயிற்றுப் புழுவை ஆகியவற்றை நீக்கும்
பாகற்காய் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய பாகற்காய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் -1 ஸ்பூன்
கார்ன் பிளார் - 1 ஸ்பூன்
அரிசி மாவு-1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாகற்காயை நன்றாக கழுவி விட்டு,பின் மெல்லிய வட்ட வடிவங்களில் ஒரே மாதிரியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், கார்ன் பிளார், அரிசி மாவு, இஞ்சி -பூண்டு பேஸ்ட் , மற்றும் உப்பு போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இப்போது அந்த பாத்திரத்தில் அரிந்து வைத்துள்ள பாகற்காயை போட்டு சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும்.
பிரட்டி எடுத்த பாகற்காயை பெரிய தட்டு ஒன்றில் பரவலாக வைத்து ஊற வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து, தட்டில் வைத்துள்ள பாகற்காயை இரண்டு அல்லது மூன்றாக (கொஞ்சம் கொஞ்சமாக) எண்ணெயில் போட்டு சிவக்க செய்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோ தாங்க க்ரிஸ்பியான பாகற்காய் சிப்ஸ் ரெடி!