Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் விசேஷமா? அப்போ இந்த ஹல்வாவை ஒரு முறை செய்து அசத்துங்க!

வாருங்கள்! தித்திப்பான அசோகா ஹல்வாவை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Thiruvaiyaru Ashoka Halwa in Tamil
Author
First Published Dec 8, 2022, 2:16 PM IST

திருவையாறு என்று பெயர் சொன்னவுடன் நம்மில் அதிகமானோருக்கு நினைவில் வருவது திருவையாறு பாகவதர் இசைத் திருவிழா தான். அதனை அடுத்து மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது திருவையாறு அசோகா ஹல்வா தான். 

உடலுக்கு வலு சேர்க்கும் பாசி பருப்பு சேர்த்து செய்யப்படும் இந்த அசோகா ஹல்வாவை வாழை இலையில் மணக்கும் நெய் வாசனையுடன் ஆவி பறக்க சுடச்சுட வைத்து கொடுத்தால் போதும். நாவூறும் இதனை உடனே சுவைத்து பார்க்க தோன்றும். 

திருமண நாள், பிறந்த நாள் போன்ற வீட்டு விசேஷங்களுக்கும், பண்டிகை நாட்களிலும் வழக்கமாக செய்யும் ஸ்வீட்களை செய்யாமல் இந்த அசோகா ஹல்வாவை ஒரு முறை ட்ரை பண்ணலாம். 

பாசிபருப்பில் செய்வதால் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்வீட் என்று சொல்லலாம். வாருங்கள்! தித்திப்பான அசோகா ஹல்வாவை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அசோகா ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 2 கப் 
கோதுமை மாவு -1 கப் 
மைதா மாவு - 2 ஸ்பூன்
நெய் - 1.5 கப் 
சர்க்கரை - 1.5 கப் 
ஏலக்காய் தூள் -1/4 ஸ்பூன்
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 20 கிராம்
புட் கலர் - ஒரு சிட்டிகை

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் "சிவப்பு அரிசி ஆப்பம்"! செய்யலாம் வாங்க!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை சேர்த்து சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் முந்திரியை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து,பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பாசிப்பருப்பை தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். 

பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வறுத்த பாசி பருப்பு சேர்த்து பின் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் வைத்து வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு அடுப்பில், சின்ன பான் வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து, நெய் உருகிய பின் அதில் பொடித்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து pan ஐ தனியாக வைத்து கொள்ள வேண்டும். 

இப்போது அடுப்பில் அடிகனமான ஒரு கடாய் வைத்து அதில் மீதமுள்ள அனைத்து நெய்யினையும் சேர்த்து ,பின் அதில் சலித்து வைத்துள்ள கோதுமை - மைதா மாவு சேர்த்து அடுப்பின் தீயை சிம்மில் வைத்து, கை விடாமல் கிளறி வறுக்க வேண்டும். சிறிது நேரத்தில் மாவு கொஞ்சம் வெந்து நிறம் மாறி வாசனை வரும் போது வேக வைத்துள்ள பாசிபருப்பினை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பாசிப்பருப்பு மாவுடன் சேர்ந்து நன்றாக கலந்து ஒரு கலவையாக மாறிய பிறகு, அதில் பொடித்த சர்க்கரை மற்றும் புட் கலர் சேர்த்து கடாயின் ஓரம் ஒட்டாமல் தொடர்ந்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை சுண்டி ஹல்வா பதம் வந்த பிறகு, வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் வாயில் போட்டவுடன் கரையும் சுவையான  அசோகா ஹல்வா ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios