வித்தியசாமான அன்னாசி மசாலா செய்து சாப்பிடலாம் வாங்க!
வாருங்கள்! ருசியான அன்னாசி மசாலாவை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக அன்னாசி வைத்து சாலட் , ஜூஸ் என்று தான் செய்து சுவைத்து இருப்போம். ஆனால் இன்று அன்னாசி வைத்து சூப்பரான சுவையில் அன்னாசி மசாலா செய்ய உள்ளோம். இதனை சப்பாத்தி, தோசை, பூரி போன்றவற்றிக்கு வைத்து சாப்பிடலாம். மேலும் இதன் சுவை நாம் வழக்கமாக செய்து சாப்பிடுகின்ற சப்ஜியில் இருந்து கொஞ்சம் மாற்றாக இருக்கும்.
வாருங்கள்! ருசியான அன்னாசி மசாலாவை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
அன்னாசி - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
வெல்லம் - 5 ஸ்பூன்
புளிச்சாறு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு.:
தேங்காய் - 3/4 கப்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
எள்ளு - 2 ஸ்பூன்
காஷ்மீரி வரமிளகாய் - 6
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் -தேவையான அளவு
தாளிப்பதற்கு :
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் அன்னாசியை தோல் சீவி ஒரே அளவிலான சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.தேங்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி அரிந்த அன்னாசி பழத்தினை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, வெந்தயம், உளுந்து, எள்ளு,மிளகாய்,கறிவேப்பிலை ஆகியவற்றை தனி தனியாக வறுத்துக் கொண்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஆறிய கலவையை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ,அதில் துருவிய தேங்காய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
அன்னாசி வெந்த பிறகு, அதில் துருவிய வெல்லம், புளிச்சாறு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு ஒரு தட்டு போட்டு மூடி விட வேண்டும்.
பின் அதனை சுமார் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். பின் அதில் அரைத்த மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கலவை கொதித்து கொஞ்சம் கெட்டியாக மாறிய பிறகு, அடுப்பை அனைத்து விட வேண்டும்.
அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொண்டு அதனை கிரேவியில் சேர்த்து கிளறினால், ருசியான அன்னாசி மசாலா ரெடி!