மகா சிவராத்திரி ஸ்பெஷல் 2023 -சிவபெருமானுக்கு பிடித்த பஞ்ச கஜாய இனிப்பு செய்து சிவபெருமானை வழிபடுங்கள்!
வாருங்கள்! பஞ்ச கஜாய இனிப்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிவபெருமானுக்கு உகந்த மகாசிவராத்திரி பிப்ரவரி 18 ஆம் நாளான நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் ஞானகுருவான சிவபெருமானை அபிஷேகம் செய்து வணங்கினால் முன் ஜென்மாக்களில் நாம் செய்த பாவங்கள் விலகி போகும். மகா சிவராத்திரியின் போது சிவஸ்தலங்களில் 4 கால பூஜைகளின் போது அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். சிவராத்திரியன்று வெளியில் இருந்து பலகாரங்களை வாங்கி சிவ பெருமானுக்கு படைப்பதை விட, நீங்களே உங்கள்ம் கைகளால் வீட்டில் செய்து பலகாரம் செய்து சிவனுக்கு நிவேதனம் செய்தால் மிகவும் நல்லது.
1 கால பூஜைக்கு வெண்பொங்கலும், 2 ம் கால பூஜைக்கு சர்க்கரை பொங்கல்,பாயசம் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பு வகை செய்து படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். 3ஆம் கால பூஜைக்கு எள் சாதம் செய்து படைப்பார்கள். 4 ஆம் கால பூஜைக்கு சுத்த அன்னம் எனப்படும் வெள்ளை சாதத்தினை செய்து சிவபெருமானுக்கு படைத்து நெய்வேத்தியமாக வழங்குவார்கள்.
இதனை தவிர அனைத்து விதமான சுவீட்களையும் நாம் வீட்டில் செய்து சிவபெருமானுக்கு படைத்து வழிபடலாம். அந்த வகையில் இன்று நாம் அரிசி தம்பிட்டு என்றழைக்கப்படும் பஞ்ச கஜாய ரெசிபியை வீட்டில் எளிமையாக செய்து பார்க்கலாம் வாங்க. இந்த பஞ்ச கஜாய ரெசிபி கர்நாடகாவின் மிக பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இதனை பிரதோஷ மற்றும் சிவராத்திரியின் போது செய்து சிவனுக்கு படைப்பார்கள். பஞ்ச கஜாய என்றால் 5 பொருட்களை வைத்து செய்யப்படும் 1 இனிப்பு வகை ஆகும். ஐந்தெழுத்து நமசிவாய நாமத்தை போல் 5 பொருட்களை கொண்டும் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை ஆகும்.
வாருங்கள்! பஞ்ச கஜாய இனிப்பு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- வெல்லம் -1 கப்
- பச்சரிசி- 1 கப்
- பொட்டு கடலை-1/2 கப்
- நிலக்கடலை- 1/2 கப்
- எள்ளு - 4 ஸ்பூன்
அனைவரும் விரும்பி சாப்பிடும் "பட்டர் முறுக்கு" செய்வோமா!
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல், கடாய் சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொண்டு முதலில் பச்சரிசியை சேர்த்து சிவக்க வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதே கடாயில் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு சிவக்க வறுத்து அதனையும் அரசி எடுத்து வைத்துள்ள பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனை அடுத்து நிலக்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் எள்ளினை சேர்த்து சிவக்க வறுத்துக் கொண்டு அனைத்தையும் ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் வெல்லம் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வறுத்து ஆற வைத்துள்ள கலவையை மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் இந்த வெல்லக் கரைசலை சிறுக சிறுக சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரே அளவிலான உருண்டைகளாக செய்து எடுத்தால் பஞ்ச கஜாய இனிப்பு ரெடி!
இதனை நாளைய தினமான சிவராத்திரிக்கு செய்து சிவனுக்கு படைத்து நெய்வேத்தியமாக அனைவருக்கும் கொடுத்து சிவனருள் பெற்று வாழ்வில் வளம் பெறுங்கள்.