இட்லி,தோசைக்கு இனி "கோவக்காய் சட்னி" செய்து சாப்பிடுங்க!
இன்று நாம் கோவக்காய் வைத்து சட்னியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் கொள்ளலாம்.
நாம் அன்றாடம் இட்லி, தோசை போன்றவற்றிக்கு தேங்காய் சட்னி,தக்காளி சட்னி,கார சட்னி,புதினா சட்னி,சாம்பார் என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இதனையே செய்து அலுத்து விட்டதா?
இதை தவிர்த்து வேறு ஏதேனும் வித்தியாசமாக சட்னி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். இன்று நாம் சற்று வித்தியாசமாக கோவக்காய் சட்னி செய்ய உள்ளோம். இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட்டோம் என்ற கணக்கே தெரியாது.
வழக்கமாக கோவக்காய் வைத்து பொரியல்,கோவக்காய் வறுவல், கோவக்காய் கூட்டு போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் கோவக்காய் வைத்து சட்னியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கோவக்காய் - 100 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 10 பற்கள்
புளி - லெமன் சைஸ்
தனியா விதை - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
வர மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
கடுகு - 1/4 ஸ்பூன்
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காய தூள்-2 சிட்டிகை
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோவக்காயை நன்றாக அலசி கொண்டு,தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொண்டு,அதன் 2 முனைகளை வெட்டி விட வேண்டும்.பின் அதனை நீட்ட நீட்டமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை மெல்லிதாக வெட்டி கொள்ள வேண்டும்.அதே போல் பூண்டினை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் விட்டு,எண்ணெய் சூடான பின்,அதில் வெந்தயம் சேர்த்து கொஞ்சம் வறுத்து விட்டு,அரிந்து வைத்துள்ள வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கி விட்டு,பின் அரிந்து வைத்துள்ள கோவக்காய் சேர்த்து வதக்கி விட வேண்டும். கோவக்காய் வதங்கிய பின் தனியா,பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய், புளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும்.அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர், அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, ஆற வைக்க வேண்டும்.
கலவை ஆறிய பிறகு, ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி,அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை 1 கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை,வரமிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொண்டு சட்னியில் சேர்த்து விட்டால், கோவக்காய் சட்னி ரெடி!