குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் "சீஸ் மசாலா ஊத்தப்பம் " இப்படி செய்து அசத்துங்க!
வாருங்கள்! டேஸ்ட்டான சீஸ் மசாலா ஊத்தப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் நாம் காலை உணவாக சாப்பிடுகின்ற இட்லி, தோசையை ஒரே விதமாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் புதுமையாக வேறு ஏதேனும் செய்து தரும்படி கேட்பார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. இட்லி மாவு வைத்து சூப்பரான ஒரு டிஷ் தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். இட்லி மாவை வைத்து ஆனியன் தோசை, முட்டை தோசை, பொடி தோசை,மசாலா தோசை என்று செய்து சாப்பிட்டு இருப்போம். இதனை தவிர வேறு என்ன? செய்ய முடியும் துன்று யோசிக்கிறீங்களா? இன்று நாம் சீஸ் மசாலா ஊத்தப்பம் செய்ய உள்ளோம்.இதனை பிடிக்காது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.
வாருங்கள்! டேஸ்ட்டான சீஸ் மசாலா ஊத்தப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- பெரிய வெங்காயம்-1
- தக்காளி -2
- பச்சை மிளகாய்-1
- துருவிய சீஸ்-1/4 கப்
- பட்டர்-1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
- இட்லி பொடி -1 ஸ்பூன்
- மல்லித்தூள்-1/2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்-தேவையான அளவு
- மல்லித்தழை-கையளவு
செய்முறை :
முதலில் வெங்காயம்,தக்காளி, மல்லித்தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.சீஸினை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடான பின் அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து சிறிது பட்டரையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும் பிறகு இதில் பொடியாகஅரிந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கி விட வேண்டும். தக்காளி நன்கு குழைந்த பின்னர் இதில் இட்லி பொடி, மஞ்சள்தூள் ,மல்லித்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கி விட வேண்டும்.
இப்போது இந்த மசாலா கலவையை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சூடான பின் அதில் சிறிது பட்டர் விட்டு பின் இட்லி மாவினை ஊத்தப்பம் போன்று தடிமனாக ஊற்றி அதன் மேல் இந்த மசாலாவை வைத்து பின் துருவிய சீஸ், மல்லித்தழை மற்றும் இட்லி பொடியை தூவ வேண்டும். இப்போது சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சூப்பரான மசாலா ஊத்தாப்பம் ரெடி!