Egg Pepper Fry : முட்டையை இப்படி செய்து பாருங்கள். செய்த அடுத்த நிமிடமே அனைத்தும் காலி ஆகி விடும்!
இன்று நாம் முட்டை வைத்து முட்டை பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் தினமும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு என்றால் முட்டையை கூறலாம்.
முட்டையில் உள்ள கோலின் சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.மேலும் இதில் வைட்டமின் டி இருப்பதால் எலும்புகள் வலுவடைய பெரிதும் துணை புரிகிறது. ஓமேகா 3 முட்டையில் அதிகம் காணப்படுவதால் இருதய தொந்தரவுகள் வராமல் தடுக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் முட்டையை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், அதிலுள்ள ஃபோலிக் அமிலம், வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.மேலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
அது தவிர கண் பார்வை பிரச்சனைகளை சரி செய்ய முட்டை உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும் முட்டை மிக முக்கிய பங்கு அளிக்கிறது.
வழக்கமாக முட்டை வைத்து போண்டா, பொடிமாஸ், ஆம்லெட், குருமா, கிரேவி என்று சமைத்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் முட்டை வைத்து முட்டை பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1/4 கப்
மிளகு-2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு-1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தழை -கையளவு
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சைனீஸ் ஸ்டைலில் ஜிஞ்சர் கார்லிக் சிக்கன் செய்யலாம் வாங்க!
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, மல்லித்தழைஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும். முட்டையை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து 2 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து, எண்ணெய் சேர்க்காமல், மிளகு மற்றும் சீரகம் சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு,அதனை ஆற வைத்து பின் மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடான பின்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொண்டு, பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கி விட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பின் அதில் தனியா தூள்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகு சீரக தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, அதன் கார தன்மை போகும் வரை வதக்கி விட்டு 2 க்ளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும் போது,வேக வைத்து எடுத்துள்ள முட்டைகளை பாதியாக வெட்டி மசாலாவில் சேர்க்க வேண்டும். இப்போது கிரேவி கெட்டியாக வந்து, முட்டையில் மசாலாக்கள் இணைந்து வரும் போது அடுப்பினை ஆஃப் செய்து விட்டு பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவினால் சூப்பரான முட்டை பெப்பர் ஃப்ரை ரெடி!!!
இதனை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தட்டில் வாய்த்த சாதம் அடுத்த நிமிடமே காலி ஆகிவிடும்.