கேரட்டை விடுங்க...இந்த 8 உணவுகளை சாப்பிட்டாலே கண் பார்வை தெளிவாகும்
கண் பார்வையை பாதுகாப்பதில், கண்பார்வை குறைபாடுகளை சரி செய்வதில் நம்முடைய தினசரி உணவுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. வைட்டமின் ஏ, இ போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் கண்பார்வை சிறக்கும். கண்பார்வையை அதிகரிக்க உதவும் சத்து மிக்க உணவுகள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.

கேரட், கீரை ஆகியவை தான் கண்பார்வைக்கு மிக மிக நல்லது. அதனால் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் அடிக்கடி கேரட் சாப்பிட வேண்டும் என சொல்லுவார்கள். ஆனால் சிலருக்கு, குறிப்பாக பல குழந்தைகளுக்கு கேரட் சாப்பிடுவது என்றாலே அலர்ஜி. கேரட் தவிர, அதை விடவும் அதிக சத்துக்கள் நிறைந்த 8 உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலே கண் பார்வையில் இருக்கும் குறைபாடுகள் படிப்படியாக குறைய துவங்கி விடும். அந்த 8 உணவுகள் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
சர்க்கரை வல்லி கிழக்கு :
ஸ்வீட் பொட்டேடோ எனப்படும் சர்க்கரை வல்லிக் கிழங்கு கண்பார்வைக்கு மிக மிக நல்லது. இதில் வைட்டமின் இ மற்றும் பிற ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவைகள் உங்களின் கண் பார்வையை பாதிக்கும் காரணிகளுக்கு எதிராக போராடும் திறன் கொண்டவை.
விதைகள், நட்ஸ் :
சியா விதைகள், சணல் விதைகள், ஆளி விதைகள் ஆகியன கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றவை. இவற்றில் ஒமேகா 3 மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிக உள்ளன. அதே போல் ஒமேகா 3, வைட்டமின்கள் அதிகம் நிறைந்த நட்ஸ்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வால்நட்ஸ், பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற நட்ஸ்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கீரை வகைகள் :
அடர்ந்த பச்சை நிற இலைகளை கொண்ட கீரைகளில் வைட்டமின் ஏ அதிகம். அதோடு லுடின் மற்றும் ஜியாஸனதின் என்ற இரண்டு சக்தி நிறைந்த ஆன்டிஆக்சிடென்ட்கள் உள்ளதால் இவைகள் தீங்கு விளைவிக்கக் கூடிய வெளிச்சம், விளக்குகளின் ஒளியில் இருந்து உங்களின் கண்களை பாதுகாக்கும்.
தயிர் :
தயிர், வைட்டமின் ஏ நிறைந்த பால் பொருள் ஆகும். இதில் உள்ள ஜிங்க் போன்ற சத்துக்கள் கண்களில் உள்ள ரெடினாவிற்கு மிக நல்லது. அதனால் தினமும் ஒரு கப் அளவிற்காவது தயிர் உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான கால்சியமும் கிடைக்கும்.
முட்டைகள் :
ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு. இதில் ஜியாஸனதின், லுடின் அதிகம் என்பதால் பார்வை இழப்பை தடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை அதிகம். இவைகள் உடலில் கால்சியம் அளவை பாதுகாக்கும் தன்மை கொண்டவை.
மீன் :
மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றில் ஒமேகா 3 மிக அதிகம். இது கண்களை வறண்டு விடாமல் பாதுகாக்கும். குறிப்பாக அதிக நேரம் கம்யூட்டர் பார்த்தபடி வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். கானாங்கெளுத்தி, கட்லா, மத்தி, சங்கரா போன்றவற்றில் ஒமேகா 3 அதிக அளவில் உள்ளது.
பருப்பு வகைகள் :
தினசரி உணவில் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை அதிகரிக்கும். இவற்றில் நார்ச்சத்துக்கள், நிறைவுற்ற கொழுப்புக்கள் அதிகம் உள்ளதால் கண் பார்வைக்க மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இவற்றில் ஜிங்க் சத்துக்கள் அதிகம்.. அதே போல் பருப்புக்களுக்கு இணையான சத்துக்கள் இறைச்சி வகைகளிலும் கண் பாதுகாப்பிற்கு தேவையான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
நெல்லிக்காய் :
நெல்லிக்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை அதிகம் உள்ளன. இது கண் பார்வையை பாதுகாக்க உதவுகிறது. இவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் என்பதால் வயதானால் ஏற்படும் கண் பிரச்சனைகளில் எதிர்த்து போராட உதவுகின்றன.