வழக்கமான பருப்பு வடை, உளுந்து வடை சாப்பிட்டு போரடித்து விட்டதா? சட்டென வித்தியாசமான தேங்காய் வடை செய்து அசத்துங்க. வித்தியாசமாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தென்னிந்திய உணவு கலாச்சாரத்தில், வடை என்பது ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் தேங்காய் வடை, சுவையிலும், வாசனையிலும் தனித்துவமிக்கது. இதனை மழைக்கால ஈவினிங் அல்லது சிறப்புக் கொண்டாட்ட நாட்களில் செய்து பரிமாறலாம்.
தேங்காய் வடை சிறப்புகள் :
- கிராமப்புறங்களில் இதனை சிறப்பு சமையலாக செய்து, பண்டிகை நாட்களில் தயாரிப்பது வழக்கம்.
- தேங்காய் சேர்ப்பதால் வடை சிறிது குளிர்ச்சியாகவும், மணம் மிக்கதாகவும் இருக்கும்.
- தேங்காய் உடலுக்கு நல்ல கொழுப்பை வழங்கி, நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் நல்ல சத்தான உணவாக கருதப்படுகிறது.
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 1 கப் (2 மணி நேரம் ஊறவைத்தது)
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 5 (நறுக்கியது)
பெருங்காயம் - சிறிதளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை -2 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 டீஸ்பூன் (மொறுமொறு தருவதற்கு)
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
தினமும் காலையில் 5 வேப்பிலை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம்
செய்முறை :
- கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிக்கவும். மிக்ஸியில் பச்சைமிளகாய், பெருங்காயம் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
- அரைத்த மாவில் தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், சீரகம், உப்பு, அரிசி மாவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
வடை குவியாமல், மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும் வர வேண்டுமெனில் கலவை அதிக ஈரமாக இருக்கக்கூடாது.
- கை நனைத்து சிறிய உருண்டைகள் எடுத்து, மெதுவாக தட்டி, வடை வடிவில் அமைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை நன்றாக காய்ச்சி, வடைகளை போட்டு, நடுநடுவே திருப்பி, பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும்.
பரிமாறும் முறைகள் :
- சூடாக இருக்கும் போதே தேங்காய் சட்னி, பச்சை மிளகாய் சட்னி, காரசாரமான புதினா சட்னி, அல்லது கொத்தமல்லி சட்டினியுடன் பரிமாறலாம்.
- மழைக்கால, மாலை நேர ஸ்நாக்ஸாகவும், சிறப்பு விருந்துகளில் பருப்பு வடைக்கு மாற்றாக செய்து பரிமாறலாம்.
- பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பிடிக்குமாறு, குறைந்த காரத்துடன் தயார் செய்து பரிமாறலாம்.
வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க....தலைமுடி காடு மாதிரி வளரும்
சுவையை அதிகரிக்க :
- தேங்காய் மிகுதியாக சேர்க்கப்படும்போது, வடை மென்மையாக இருக்கும். ஆனால் அதிகமாகச் சேர்க்கக் கூடாது, இல்லையெனில் எண்ணெயை அதிகம் உறிஞ்சும்.
- அரிசி மாவு சேர்ப்பதால், வடை மேலும் மொறுமொறுப்பாக இருக்கும்.
- எண்ணெயில் போடும் முன்னர், அடுப்பை மிதமான தீயில் வைக்கவும், அதிக சூட்டில் வடை வெளிப்புறத்தில் மட்டும் வெந்து உள்ளே மிருதுவாக இருக்கும்.
- வடை கலவையில் தண்ணீர் அதிகமாகி விட்டால், சிறிதளவு கடலை மாவு சேர்த்துக் செய்யலாம்.
