யார் இந்த லீ சிங்-யுன்? 256 ஆண்டுகள் வாழ்ந்த மனிதரின் நீண்ட ஆயுள் ரகசியங்கள்!
லீ சிங்-யுன், ஒரு சீன மூலிகை மருத்துவர், 256 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவரது நீண்ட ஆயுளின் ரகசியங்கள் மன அமைதி மற்றும் சில மூலிகைகள் என்று நம்பப்படுகிறது.

உலகின் மிக நீண்ட காலம் வாழ்ந்த மனிதர்
பெரும்பாலான மக்கள் நீண்ட ஆயுளை விரும்பினாலும், ஒரு சிலரே அதை அடைகிறார்கள். சராசரி மனித ஆயுள் 70 முதல் 80 ஆண்டுகள் என்று இருக்கும் இந்த காலகட்டத்தில், சுமார் 250 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு சீனரின் கதை ஆச்சரியமானதாகவும், புதிரானதாகவும் உள்ளது.
லீ சிங்-யுன் - ஒரு சீன மூலிகை மருத்துவர், தற்காப்புக் கலைஞர். உலகில் இதுவரை வாழ்ந்த மிக வயதானவர் என்று பலர் நம்புகின்றனர். அறிக்கைகளின்படி, லீ 1736 இல் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி என்றால் அவர் 1933 இல் இறந்தபோது அவருக்கு 197 வயது இருந்திருக்கும். இருப்பினும், இன்னும் சில பதிவுகள், அவர் 1677 இல் பிறந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி லீ 256 ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் என்று கருதுபவர்களும் உள்ளனர்.
ஆனால் லீ சிங்-யுன் நீண்ட காலம் வாழ்வதற்கு மற்றவர்களை விட வித்தியாசமாக என்ன செய்தார்? அவருக்கு 250 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ உதவியது எது? உலகின் மிக நீண்ட காலம் வாழ்ந்தவராகக் கருதப்படும் அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியங்களையும் இங்கே பார்ப்போம்.
லீ சிங்-யுன்னின் நீண்ட ஆயுள் ரகசியங்கள்
நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, லீ தனது நம்பமுடியாத நீண்ட ஆயுளுக்கு ஆச்சரியப்படும் விதமாக ஒரு எளிய விஷயத்தைக் காரணமாகக் கூறினார்: மன அமைதி. அவர் அடிக்கடி, "யாரும் நூறு வயதைத் தாண்டியும் வாழ முடியும், அவர்கள் மன அமைதியைப் பெற்றால் போதும்" என்று கூறுவார்.
மன அழுத்தம் நமது உடலின் இயற்கையான சமநிலையை சீர்குலைத்து, நமது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. நாம் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடல் அதிக அளவு கார்டிசோல் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தலாம், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். காலப்போக்கில் இதய நோய்களுக்கு காரணமாக அமையலாம். மன அழுத்தம் செரிமானம் மற்றும் தூக்கத்தையும் பாதிக்கிறது. இதனால் சோர்வு, பதட்டம், மனச்சோர்வு அதிகரிக்கலாம்.
நீண்டகால மன அழுத்தம் முதுமையைத் துரிதப்படுத்தலாம் மற்றும் நாட்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம், எனவே ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
லீ சிங்-யுன் பயன்படுத்திய மூலிகைகள்
லீயின் தனது வாழ்நாள் முழுவதும் உட்கொண்ட சில மூலிகைகள் தான் அவரது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 10 வயதிலேயே, லீ திபெத், அன்நாம் மற்றும் சியாம் போன்ற தொலைதூரப் பகுதிகளை ஆராய்ந்திருந்தார். அங்கு அவர் மருத்துவ தாவரங்களைச் சேகரித்து விற்றார். லிங்ஷி, கோஜி பெர்ரிஸ், காட்டு ஜின்செங் மற்றும் கோட்டு கோலா போன்ற பாரம்பரிய சீன மூலிகைகளை அவர் விற்பனை செய்துள்ளார். அவர் அவற்றை விற்பதோடு மட்டுமல்லாமல், அவற்றையே தாமும் பயன்படுத்தினார். மூலிகைகள் மற்றும் அரிசி ஒயின் உள்ளிட்ட எளிய உணவை உட்கொண்டார். இது அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியக் காரணம் எனப் பலர் நம்புகிறார்கள்.
லீ நீண்ட ஆயுள் கொண்டவர் எனப் பிரபலமானபோது, தளபதி வு பெய்-ஃபு ஒருமுறை லீ சிங்-யுன்னை தன்னுடன் வந்து இருக்க அழைத்தார். அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தைக் கண்டறியலாம் என்று அவர் எதிர்பார்த்தார். நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ன என்பதை லீ தானே கூறியிருக்கிறார். லீ சொல்லும் அறிவுரை எளிமையானது. “அமைதியான இதயத்தைக் கொண்டிருங்கள், ஆமையைப் போல அமருங்கள், புறாவைப் போல சுறுசுறுப்பாக நடங்கள், நாயைப் போல தூங்குங்கள்.”
லீ சிங்-யுன்னின் தனிப்பட்ட வாழ்க்கை
லீயின் வயது பற்றிய கதைகள் அவர் சுயமாகக் கூறியவை மட்டுமல்ல. 1930 களில், ஒரு சீனப் பேராசிரியர் லீயின் 150 வது மற்றும் 200 வது பிறந்தநாளைக் கொண்டாடும் பேரரசின் பதிவுகளையும் கண்டறிந்தார், இது அவரது நம்பமுடியாத நீண்ட ஆயுளுக்கு சான்றாகும். லீயின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, 1933 ஆம் ஆண்டில் (லீ இறந்த ஆண்டு), அவருக்கு 11 தலைமுறைகளில் 180 உயிருள்ள சந்ததியினர் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் 14 முதல் 23 முறை திருமணம் செய்து கொண்ட கதைகள் அவரது மர்மத்தை மேலும் கூட்டியது.
லீ சிங்-யுன் ஆரோக்கியம்
இந்த பதிவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வல்லுநர்களும் உள்ளனர். ஆனாலும், லீயின் கடைசி ஆண்டுகளில் அவரைச் சந்தித்த பலர் அவரது இளமையான தோற்றத்தைக் கண்டு திகைத்துப் போயினர் - அவரை இரண்டு நூற்றாண்டுகள் இளையவராகத் தோன்றியவர் என்று விவரித்தனர்.
உண்மையோ இல்லையோ, லீ சிங்-யுன் ஆரோக்கியம், எளிமை மற்றும் அமைதியான வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடையாளமாகவே போற்றப்படுகிறார்.