தலாய் லாமாவின் வாரிசு யார்? மறுபிறவி குறித்த அறிவிப்புக்கு சீனா எதிர்ப்பு
தலாய் லாமா தனது மறுபிறவியை அங்கீகரிக்கும் அதிகாரம் தான் நிறுவிய அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு என அறிவித்து, சீனாவின் தலையீட்டை நிராகரித்துள்ளார். சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தலாய் லாமாவின் மறுபிறவி யார்?
திபெத்திய பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா, தனது மறுபிறவியை அங்கீகரிக்கும் முழுமையான அதிகாரம், தான் நிறுவிய அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு என அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தனது வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் சீனாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதையும் அவர் தெளிவாகத் தெரிவித்துள்ளார். தனது மரணத்திற்குப் பிறகும் 600 ஆண்டுகள் பழமையான இந்தப் பாரம்பரிய நிறுவனம் தொடரும் என்று புதன்கிழமை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தர்மசாலாவுக்கு அருகிலுள்ள மெக்லியோட்கஞ்சில் நடைபெறும் மாநாட்டில், இந்த முக்கியமான அறிவிப்பை தலாய் லாமா வெளியிட்டார்.
தலாய் லாமாவின் வாரிசு தேர்வு முறை
தலாய் லாமாவின் இந்த அறிவிப்பு குறித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், தனது வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை தலாய் லாமா விளக்குகிறார்.
"திபெத்தில் உள்ள திபெத்தியர்களிடமிருந்து பல்வேறு வழிகள் மூலம் இது குறித்த வேண்டுகோளைப் பெற்றுள்ளேன். இந்தக் கோரிக்கைகள் அனைத்தின்படி, தலாய் லாமாவின் அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்" என அவர் தெரிவித்தார். அவரது அறிவிப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட துறவிகள், ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே போன்ற ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், "காதென் போத்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) எதிர்காலத்தில் தனது மறுபிறவியை அங்கீகரிக்கும் தனி அதிகாரம் உண்டு; இந்த விஷயத்தில் தலையிட வேறு யாருக்கும் எந்த அதிகாரம் இல்லை" என்று தலாய் லாமா திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த அறக்கட்டளையை 2015 இல் தலாய் லாமா நிறுவிய அமைப்பாகும்.
சீனாவுடனான கருத்து வேறுபாடுகள்
தலாய் லாமாவின் இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, சீனா கடுமையாக எதிர்வினையாற்றியது. தலாய் லாமாவை "பிரிவினைவாதி" என்று சாடிய சீனா, மறுபிறவி யார் என்பதை சீன அரசாங்கம்தான் அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவ் நிங், "தலாய் லாமா, பஞ்சன் லாமா மற்றும் பிற பெரிய பௌத்த தலைவர்களின் மறுபிறவி ஒரு தங்க குடுவையில் இருந்து குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மறுபிறவியாகத் தேர்வுசெய்யப்பட்டவர் சீன அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி, திபெத்திய பௌத்த தலைவர்களின் வாரிசுகளை "தங்க குடுவை" முறையில் தேர்ந்தெடுப்பது 18ஆம் நூற்றாண்டு முதல் இருந்துவரும் ஒரு முறை என்று கூறுகிறது. ஆனால் இந்த முறையை தலாய் லாமா மற்றும் அவரது ஆதரவாளர்கள் முற்றிலுமாக நிராகரித்து வருகின்றனர்.
தலாய் லாமாவின் கடந்த கால நிலைப்பாடுகள்
பல ஆண்டுகளாக, தலாய் லாமா, தலாய் லாமா நிறுவனம் முடிவுக்கு வரலாம் அல்லது அவரது வாரிசு ஒரு பெண்ணாகவோ அல்லது திபெத்துக்கு வெளியே பிறந்தவராகவோ இருக்கலாம் என்று கூறி வந்துள்ளார். வாரிசே இருக்காமல் போகவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பல ஆய்வாளர்கள், எதிர்காலத்தில் போட்டி தலாய் லாமாக்கள் உருவாகலாம் என்று நம்புகின்றனர் - ஒருவர் பெய்ஜிங்கால் நியமிக்கப்படுவார், மற்றொருவர் தற்போதைய தலாய் லாமாவுக்கு விசுவாசமான மூத்த துறவிகளால் நியமிக்கப்படுவார்.
14வது தலாய் லாமா லாமோ தோண்டுப்
1940 ஆம் ஆண்டில் 14வது தலாய் லாமாவாக லாமோ தோண்டுப் (Lhamo Thondup) என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட அவர், 1959 இல் சீனப் படைகள் திபெத்தில் கிளர்ச்சியை நசுக்கியபோது தனது 23 வயதில் திபெத்திலிருந்து தப்பித்தார். 1960 முதல் தர்மசாலாவில் வசித்து வரும் அவர், நாடுகடந்த ஒரு ஜனநாயக அரசை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
திபெத்திய பௌத்தர்களின் நம்பிக்கையின்படி, தலாய் லாமா தனது மறுபிறவி எடுக்கும் உடலைத் தேர்ந்தெடுக்க முடியும். தலாய் லாமாவின் வாரிசு சீனாவுக்கு வெளியே பிறப்பார் என்று அவர் கடந்த காலங்களில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தலாய் லாமாவின் இந்த அறிவிப்பு, திபெத்திய பௌத்த சமூகத்திற்கு ஒரு பெரிய ஆறுதலையும், எதிர்காலத்திற்கான தெளிவையும் அளித்துள்ளது. அதே நேரத்தில், சீனாவிற்கும் திபெத்திய நாடுகடந்த அரசாங்கத்திற்கும் இடையிலான நீண்டகால வாரிசு சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.