90வது பிறந்தநாளை முன்னிட்டு தலாய் லாமா தனது வாரிசை அறிவிக்க உள்ளார். சீனாவின் தலையீடு மற்றும் இந்தியா-சீனா உறவுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
திபெத்திய ஆன்மீகத் தலைவர் 14வது தலாய் லாமா, ஜூலை 6 ஆம் தேதி தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு, ஜூலை 2 முதல் 4 வரை தர்மசாலாவில் மூன்று நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், தற்போதைய தலாய் லாமா தனது வாரிசை அறிவிப்பார் அல்லது அடுத்த வாரிசு எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலாய் லாமாவின் வாரிசு தேர்வு, திபெத்திய பௌத்தர்களுக்கு மட்டுமல்லாமல், சீனாவுக்கும் தொலைநோக்கு கேள்விகளை எழுப்புகிறது. தலாய் லாமா வெறும் ஆன்மீகத் தலைவர் மட்டுமல்ல, அவர் நாடுகடந்த திபெத்திய அரசாங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார். அவரது அலுவலகம் சீன மேலாதிக்கத்திற்கு எதிரான திபெத்தின் எதிர்ப்புக்கு முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.
தலாய் லாமா அகிம்சை, ஆன்மிகம் மற்றும் மனிதநேயத்தை கவனமாகப் பேணி வளர்த்துள்ளார். திபெத்தியர்களின் உரிமைக்கான போராட்டம் உலகளாவிய கவனத்தைப் பெறுவதற்கு தலாய் லாமாவே முக்கியக் காரணம்.
தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் பாரம்பரிய முறை
மதிப்பிற்குரிய தலாய் லாமா பதவிக்குரிய நபரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை, பல நூற்றாண்டுகால பாரம்பரியம் கொண்டது. தலாய் லாமா தனது முன்னோடியின் மறுபிறவி என்று நம்பப்படுகிறது. துறவிகளால் நடத்தப்படும் சோதனைகள் உள்ளிட்ட சிக்கலான செயல்முறைகள் உள்ளன. இந்த செயல்முறைகள் முடிய பல ஆண்டுகள் ஆகலாம். மேலும், இது ஆன்மீக செயல்முறையாகவே இருந்து வருகிறது. இதுவரை இதில் அரசியல் தலையீடுகள் ஏதும் இல்லாத நிலையே நீடிக்கிறது.

14வது தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
13வது தலாய் லாமா, துப்டென் கியாட்சோ 1933 இல் காலமானார். அவரது பதப்படுத்தப்பட்ட உடல் தெற்கு நோக்கி வைக்கப்பட்டிருந்தது, ஆனால் அவரது தலை வடகிழக்கு நோக்கித் திரும்பியிருப்பதைக் கண்ட துறவிகள், இதை ஒரு ஆன்மீக அடையாளமாக எடுத்துக்கொண்டனர். சில மூத்த துறவிகள் தென்கிழக்கு திபெத்தில் உள்ள புனித லமோ லாட்சோ ஏரிக்குச் சென்றனர். அங்கு லாமாக்கள் மறுபிறவியின் இருப்பிடம் குறித்த தரிசனங்களைப் பெற அடிக்கடி தியானம் செய்தார்கள்.
அப்போது இடைக்காலத் தலைவராகச் செயல்பட்ட ரீஜென்ட் ரெட்டிங் ரின்போசே, ஏரியில் ஒரு தரிசனத்தைக் கண்டதாகக் கூறப்படுகிறது. அவர் பச்சை கூரையுடன் கூடிய கோவில், நீல நிற ஓடுகள் பதித்த வீடு, மற்றும் "அஹ்," "கா," மற்றும் "மா" என்ற எழுத்துக்களைக் கண்டிருக்கிறார். இவை தேடலுக்கு வழிகாட்டின.
புனித லமோ லாட்சோ ஏரியில் காணப்பட்ட தரிசனங்களைத் தொடர்ந்து, திபெத்தின் வடகிழக்கு அம்தோ பகுதிக்கு ஒரு தேடல் குழு அனுப்பப்பட்டது. இது இப்போது சீனாவின் குயிங்ஹாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகும். தேடல் குழுவினர் தாக்ட்சர் என்ற சிறிய கிராமத்தில் 1935 ஜூலை 6ஆம் தேதி ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லாமோ தோண்டுப் என்ற 2 வயது சிறுவனைக் கண்டுபிடித்தனர்.
சிறுவயதிலேயே, அந்தப் பையன் துறவிகளை வியக்க வைக்கும் அசாதாரண நடத்தையை வெளிப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தேடல் குழுவினர் தங்கள் நோக்கத்தை ரகசியமாக வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் அந்த கிராமத்திற்குச் சென்றனர். ஆனால், சிறுவன் அவர்களை அடையாளம் கண்டார். தேடல் குழு அவருக்கு பல சோதனைகள் வைத்தது. அப்போது அவர், 13வது தலாய் லாமாவிற்குச் சொந்தமான ஜெபமாலை மணிகள், மூக்குக் கண்ணாடி, கைத்தடி போன்ற பல பொருட்களைத் துல்லியமாக அடையாளம் காட்டினார். இதன் மூலம் அவர்தான் 13வது தலாய் லாமாவின் உண்மையான மறுபிறவி என்ற உறுதியான முடிவுக்கு வந்தனர்.
அடுத்த தலாய் லாமா யார்?
14வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுத்தது போலவே, அவரது வாரிசையும் பாரம்பரிய முறைப்படி தேர்ந்தெடுக்க முடியாது. அவர் உயிருடன் இருக்கும்போதே தனது வாரிசை முன்கூட்டியே அறிவிக்கலாம். திபெத்தின் சுயாட்சியைக் கட்டுப்படுத்த சீனா கொடுக்கும் அழுத்தம் அதிகரித்து வருவது இதற்கு முக்கியக் காரணமாகும்.
தற்போதைய தலாய் லாமா ஏற்கனவே தனது புத்தகத்தில் தனது மறுபிறவி சீனாவிற்கு வெளியே பிறப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் வியூகம்
திபெத் மீதான தனது அதிகாரத்திற்கு சவால் விடும் ஒரு அமைப்பாக தலாய் லாமா இருப்பதாக சீனா கருதுகிறது. 1951 இல் திபெத்தை இணைத்துகொண்ட சீனா, தலாய் லாமாவின் வாரிசை அங்கீகரிக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உள்ளது என்றும், தலாய் லாமா சீனாவில் பிறப்பவராகத்தான் இருக்க முடியும் என்றும் வலியுறுத்தியது.
திபெத்திய பௌத்தத்தில் இரண்டாவது மிக உயர்ந்த நபராகக் கருதப்படும் பஞ்சன் லாமா. தலாய் லாமாவால் அங்கீகரிக்கப்பட்ட குழந்தையான பஞ்சன் லாமாவை சீன அரசாங்கம் கடத்திச் சென்றது. தனது சொந்த பஞ்சன் லாமாவையும் நியமித்தது. ஆனால், இது திபெத்திய மக்களால் பரவலாக நிராகரிக்கப்படுகிறது.

இந்தியா - சீனா உறவுகள்
தலாய் லாமா தொடர்பான இந்த விவகாரம் ஏற்கனவே பதட்டமான இந்தியா-சீனா உறவுகளை மேலும் பாதிக்கக்கூடும். 2017இல் டோக்லாம் மோதல், 2020-21 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் நடந்த மோதல் ஆகியவை இந்தியா-சீனா உறவுவைச் சிக்கலாக்கியுள்ளன. குறிப்பாக லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து உரிமை கோரி வருவது முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
தலாய் லாமா இந்திய மண்ணில் ஒரு வாரிசை அறிவித்தாலோ அல்லது அவரது மறுபிறவி இந்தியாவில் அல்லது நாடுகடந்த சமூகத்தில் தனது வாரிசு பிறக்கும் என்று குறிப்பிட்டாலோ, சீனா அதற்கு வலுவாக எதிர்வினையாற்றலாம். அத்தகைய சூழ்நிலை, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவை மோதல் போக்கை இன்னும் ஆழப்படுத்தலாம்.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் சீன அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தலாய் லாமாவை அங்கீகரிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளன. தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பது திபெத்திய மக்களின் உரிமை என்பதால் திபெத்தியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளன.
வரும் வாரத்தில் தலாய் லாமாவின் வாரிசி குறித்த அறிவிப்பு வெளியானால், அது நாடுகடந்த திபெத்திய அரசாங்கத்திற்கும் சீனாவிற்கும் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலுக்கு வழிவகுக்கலாம்.
