Australia vs New Zealand, Dalai Lama: திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை சந்தித்த நியூசிலாந்து அண்ட் டீம்!
தரம்சாலாவில் நடந்த இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து வீரர்கள் திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமாவை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 21ஆம் தேதி வரையில் ஒவ்வொரு அணியும் தலா போட்டிகளில் விளையாடியிருந்தனர். இதில், நியூசிலாந்து மற்றும் இந்தியா மட்டுமே விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்திருந்தன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 21ஆவது லீக் போட்டி கடந்த 22ஆம் தேதி தரம்சாலாவில் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. இதில் டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர் 46 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை விளையாடிய விராட் கோலி 5 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டு 95 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
இறுதியாக இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்தது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 29 ஆம் தேதி லக்னோவில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று நியூசிலாந்து வரும் 28ஆம் தேதி தரம்சாலாவில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
அதுவரையில் தரம்சாலாவில் தங்கியிருக்கும் நியூசிலாந்து வீரர்கள் இன்று திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசியுள்ளார். மேலும், புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலாய் லாமா அமைதிக்கான நோபல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா உடனான போட்டிக்கு முன்னதாக தரம்சாலாவில் தலாய் லாமா இல்லத்திற்கு சென்ற நியூசிலாந்து வீரர்கள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். தரம்சாலாவின் கங்கரா மாவட்டத்தில் உள்ள மெக்லியோட் கஞ்ச் பகுதியில் உள்ள தலாய் லாமா இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்த நியூசிலாந்து வீரர்கள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தலாய் லாமா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.