- Home
- உலகம்
- Bear: ஒரே ஒரு கரடியால் மொத்த நகரமே லாக்டவுன்.. முடங்கிய மக்கள்.. 94 பள்ளிகள் மூடல்.. எங்க தெரியுமா?
Bear: ஒரே ஒரு கரடியால் மொத்த நகரமே லாக்டவுன்.. முடங்கிய மக்கள்.. 94 பள்ளிகள் மூடல்.. எங்க தெரியுமா?
Bear: ஜப்பானில் ஒரே ஒரு கரடியால் ஒட்டுமொத்த நகரமே லாக்டவுன் ஆனது. 94 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜப்பானை கதிகலங்க வைக்கும் கரடிகள்
உலகத்தில் சவால்களை அதிகம் சந்திக்கும் ஒரு நாடு ஜப்பான். ஏனெனில் அங்கு நிலநடுக்கம், சுனாமி, பெரு வெள்ளம் என இயற்கை பேரிடர்கள் அடிக்கடி வந்து அச்சுறுத்தும். ஆனால் சவால்களை முறியடித்து ஜப்பான் வீறுநடை போட்டு வருவது வழக்கம். இப்படிபட்ட ஜப்பானில் ஒரு நகரமே ஒரு கரடியால் முடங்கியுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது ஜப்பானில் ஒரு நகரத்தில் பூங்கா அருகே கரடி ஒன்று தென்பட்டதால், அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கரடியால் நகரமே லாக்டவுன்
தலைநகர் டோக்கியோவிலிருந்து 100 கிலோமீட்டர் வடக்கே உள்ள உட்சுனோமியா நகரத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில், 94 தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று, நகரத்தில் உள்ள ஒரு பூங்கா அருகே இரண்டு இளைஞர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கருங்கரடியைப் பார்த்துள்ளனர். பீதியடைந்த இளைஞர்கள் முன்னால் இருந்து அந்த கரடி ஓடிச்செல்லும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
வீடுகளில் முடங்கிய மக்கள்
இதைத் தொடர்ந்து, பகல் நேரத்திலேயே மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கரடி நடமாட்டம் இருந்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு, நகர மையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழிற்சாலைப் பகுதியிலும் கரடி தென்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் உஷாரான நகர சபை அதிகாரிகள், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் பாதுகாப்பாக மூடி வைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒருவேளை கரடியைக் கண்டால், அதன் அருகில் செல்லாமல் உடனடியாக அருகிலுள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
94 பள்ளிகள் மூடல்
இதுகுறித்து நகரசபையின் பிரச்சார வாகனங்கள் நகரம் முழுவதும் அறிவிப்பு செய்து வருகின்றன. போலீசாரும், உள்ளூர் வேட்டைக்காரர்கள் குழுவும் கரடியைத் தேடத் தொடங்கிய பின்னரே, நகரசபை எல்லைக்குட்பட்ட பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் கரடிகள் காடுகளை விட்டு ஊருக்குள் வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் சுமார் 50,000 முறை இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெரும்பாலும் வடகிழக்கு பகுதிகளில் கரடி தொல்லை அதிகமாக உள்ளது.
ஜப்பானில் அதிகரிக்கும் கரடிகள் தொல்லை
ஆனால், டோக்கியோவுக்கு அருகிலுள்ள நகரங்களில் கரடி தொல்லை பொதுவாக இருந்ததில்லை. கடந்த மாதம், டோக்கியோ அருகே உள்ள ஒகுதாமாவில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மலையேறும் வீரர் மீது கரடி தாக்கி காயப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அருகிலுள்ள நகரமான ஹச்சியோஜியிலும் கரடி தென்பட்டது. கடந்த வாரம், ஃபுகுஷிமாவில் நான்கு பேர் மீது தாக்குதல் நடத்திய ஒரு கரடி, ஒரு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர் ஒருவரைக் காயப்படுத்தியது. பின்னர் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்த அந்த கரடி, உள்ளிருந்தே ஜன்னலைத் திறந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்ஷுவில் 12,000 முதல் 42,000 ஆசிய கருங்கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரிய அளவிலான பழுப்பு நிற கரடிகள் வடக்கு தீவான ஹொக்கைடோவில் மட்டுமே காணப்படுகின்றன. இங்கு சுமார் 12,000 கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

