புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்: டிரம்ப்புக்கு சவால் விடும் 'அமெரிக்கா கட்சி'
டிரம்பின் முன்னாள் கூட்டாளியான எலான் மஸ்க், அமெரிக்காவின் ஒற்றைக் கட்சி முறைக்கு சவால் விடும் நோக்குடன் 'அமெரிக்கா கட்சி'யைத் தொடங்கியுள்ளார். டிரம்பின் 'ஒன் பிக், பியூட்டிஃபுல் பில்' மசோதாவை எதிர்த்ததை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா கட்சி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் கூட்டாளியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க், அமெரிக்காவின் ஒற்றைக் கட்சி முறைக்கு சவால் விடும் நோக்குடன் 'அமெரிக்கா கட்சி' (America Party) என்ற புதிய அரசியல் கட்சியை சனிக்கிழமை அன்று தொடங்கியுள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் "ஒன் பிக், பியூட்டிஃபுல் பில்" (One Big, Beautiful Bill) என்ற மசோதாவில் கையெழுத்திட்ட ஒரு நாள் கழித்து, எலான் மஸ்க் தனது புதிய கட்சியை அறிவித்துள்ளார்.
புதிய கட்சி தொடக்கம்
2024 ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராக இருந்த மஸ்க், 'அரசுத் திறன் துறையின்' (Department of Government Efficiency) தலைவராக இருந்தார். தற்போது அந்தத் துறை செயலிழந்துவிட்டது. எலான் மஸ்க் பதவியில் இருந்தமோது, அரசின் செலவினங்களைக் குறைப்பதற்கும், அரசு வேலைகளைக் குறைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.
இதன் மூலம் டிரம்புடன் அவருக்குப் பொதுவான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. "உங்கள் சுதந்திரத்தை மீண்டும் உங்களுக்கு வழங்க 'அமெரிக்கா கட்சி' இன்று உருவாக்கப்பட்டுள்ளது," என்று மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் நடத்திய கருத்துக்கணிப்பு
முன்னதாக ஜூலை 4 ஆம் தேதி, அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, மஸ்க் தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினார். அதில், "இரண்டு கட்சி (சிலர் ஒரு கட்சி என்றும் கூறுவர்) அமைப்பிலிருந்து சுதந்திரம் வேண்டுமா? நாம் 'அமெரிக்கா கட்சி'யை உருவாக்க வேண்டுமா?" என்று கேட்டிருந்தார்.
இந்தக் கணக்கெடுப்பில் 65.4% பேர் "ஆம்" என்றும், 34.6% பேர் "இல்லை" என்றும் வாக்களித்தனர். இந்த முடிவுகளைச் சுட்டிக்காட்டி, மஸ்க் தனது பதிவில், "2-க்கு 1 என்ற விகிதத்தில், உங்களுக்கு ஒரு புதிய அரசியல் கட்சி வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அது உங்களுக்குக் கிடைக்கும்! வீண்விரயம் மற்றும் ஊழல் மூலம் நம் நாட்டை திவாலாக்கும் ஒற்றைக் கட்சி அமைப்பில் வாழ்கிறோம், இது ஜனநாயகம் அல்ல" என்று கூறியிருந்தார்.
டிரம்பின் மசோதா மற்றும் எலான் மஸ்கின் எதிர்ப்பு
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது "ஒன் பிக், பியூட்டிஃபுல் பில்" மூலம் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவர முன்வந்தார். இதனால்தான் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையேயான பதற்றம் கடந்த மாதம் மீண்டும் அதிகரித்தது. இந்தச் சட்டத்தை மஸ்க் கடுமையாக எதிர்த்தார், அதை "கடன் அடிமைத்தனம்" என்று விமர்சித்த்தார். நிதி கட்டுப்பாடுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்த குடியரசுக் கட்சி அந்த மசோதாவுக்கு ஆதரவளித்ததையும் கடுமையாகச் சாடினார்.
இந்த மசோதா அடுத்த பத்தாண்டுகளில் தேசிய பற்றாக்குறையில் $3.4 டிரில்லியன் டாலர் அதிரிப்புக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். மஸ்கின் வெளிப்படையான விமர்சனத்தைத் தொடர்ந்து, டிரம்ப் தனது நிறுவனங்களுக்கான மத்திய நிதியுதவியை ரத்து செய்வதாக அச்சுறுத்தினார், மேலும் மஸ்கை நாடு கடத்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசினார். (மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர், 2002 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.)
மூன்றாவது முன்னணிக்கு ஆதரவு
டிரம்புடனான இந்த மோதல் போக்கின் விளைவாக, எலான் மஸ்க் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான யோசனையை முன்னெடுத்தார். குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு அப்பாற்பட்ட ஒரு மூன்றாவது முன்னணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 'அமெரிக்கா கட்சி' என்ற பெயருடன் புதிய கட்சியை அறிவித்துள்ளார்.