டொனால்ட் டிரம்ப் குறித்த பேச்சுக்கு எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார். சில பதிவுகள் அளவு கடந்து சென்று விட்டதாக அவர் கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். டிரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த எலான் மஸ்க் நிதியை வாரி வழங்கினார். இதனால் தான் தேர்தலில் வெற்றி பெற பிறகு அமெரிக்காவில் தேவையில்லாத செலவினங்களை குறைப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட DOGE துறைக்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமித்தார் டிரம்ப்.

டொனால்ட் டிரம்ப்-எலான் மஸ்க் மோதல்

இருவருக்கும் நல்ல நட்புறவு நீடித்து வந்த நிலையில், DOGE துறையில் இருந்து எலான் மஸ்க் திடீரென விலகினார். இதனைத் இதன்பிறகு அண்மையில் பிக் பியூட்டிபுல் மசோதா ஒன்றை டிரம்ப் அறிமுகம் செய்தார். இந்த வரி மசோதா எலக்ட்ரிக் கார்களுக்கான வரி சலுகை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு வழிவகை செய்ததால் இதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

டிரம்புக்கு எதிராக கடும் விமர்சனம்

இதனைத் தொடர்ந்து அவர் டிரம்புக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா முட்டாள்த்தனமானது என்று ஆவேசமாக கூறினார். மேலும் சிறுமிகளுக்கான எதிரான பாலியல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்தில், டிரம்ப் பெயர் இடம் பெற்று இருப்பதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டினார். டிரம்பை வெற்றி பெற வைத்து பெரிய தவறு செய்துவிட்டேன் எனவும் எலான் மஸ்க் கூறினார்.

மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்

இதற்கு பதிலடியாக டிரம்பும் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்தார். எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார். அவருடன் தன்னால் பேச முடியாது என்று டிரம்ப் கூறியிருந்தார். இதன்பிறகு திடீரென மனது மாறிய எலான் மஸ்க் டிரம்புக்கு எதிராக தான் பதிவிட்ட ட்வீட்கள் அனைத்தையும் அழித்தார். இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் குறித்த பேச்சுக்கு எலான் மஸ்க் திடீரென மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த எனது சில பதிவுகள் அளவு கடந்து சென்று விட்டன. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.